இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர், பிரதமர் மோடியுடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினாா். மேலும், முக்கிய ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டார். அப்போது, இந்திய அணுசக்தித் துறையில் இனி தனியார் பங்களிப்பும் அனுமதிக்கப்படும் எனப் பிரதமர் மோடி அறிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்து சென்றிருந்தார். அப்போது, இரு நாடுகளிடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனால், இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை குறையும் சூழல் ஏற்பட்டது. அமெரிக்காவின் அதிகப்படியான வரிவிதிப்புக்கு மத்தியில் இந்தத் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகப் பார்க்கப்பட்டது.
இந்நிலையில்தான் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்தார் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர். அவருடன் அந்நாட்டை சேர்ந்த தொழிலதிபர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோரும் வருகை வந்தனர். பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு, ஸ்டார்மர் இந்தியா வருவது இதுதான் முதல்முறை. மும்பையில் உள்ள ராஜ்பவனில் இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மரை, பிரதமர் மோடி நேரில் வரவேற்றார். பின்னர் இரு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
அப்போது மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதனைத் தொடர்ந்து இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தான ஒப்பந்தங்கள் மூலம் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவித்தார். இந்தோ-பசிபிக் மற்றும் மேற்கு ஆசியாவில் அமைதி நிலவுவது குறித்தும், உக்ரைன் போர் உள்ளிட்டவை குறித்தும் விவாதித்தாகக் கூறிய அவர், இங்கிலாந்தை சேர்ந்த 9 பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் கல்வி வளாகங்களை திறக்க உள்ளதாகவும் அறிவித்தார்.
பின்னர் பேசிய இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர், காகிதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை விட நம்பிக்கையின் அடிப்படையில், இரு நாடுகளும் ஒன்றாக இணைந்து பணியாற்றி வருவதாகக் கூறினார். உலகின் 3-வது பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்க அவர் வாழ்த்தும் தெரிவித்தார். 2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதை மோடி இலக்காகக் கொண்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், தான் இங்கு வந்ததிலிருந்து காணும் அனைத்தும் அந்த இலக்கை எட்டுவதற்கான பாதையில் இந்தியா பயணித்து வருவதற்கான சான்றாக உள்ளதாகக் குறிப்பிட்டார்.
இதனை தொடர்ந்து பிரதமர் மோடியும், இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மரும் மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டருக்கு சென்றனர். அப்போது, அங்குக் காட்சிப்படுத்தப்பட்டிருந்த கைவினை பொருட்களை ஸ்டார்மர் ஆர்வமுடன் பார்வையிட்டார். பின்னர் குளோபல் ஃபின்டெக் விழாவில் இரு தலைவர்களும் கலந்துகொண்டனர்.
கடந்த பத்தாண்டுகளில் இந்தியா தொழில்நுட்பத்தையும் ஜனநாயகப்படுத்தியுள்ளதாகப் பிரதமர் மோடி அப்போது தெரிவித்தார். மேலும், தொழில்நுட்பம் என்பது வெறும் வசதிக்கானது மட்டுமல்ல, சமத்துவத்திற்கானதும் தான் எனக் கூறினார். மேலும், அணுசக்தித் துறையில் இனி தனியார் பங்களிப்பும் அனுமதிக்கப்படும் எனவும் அப்போது அவர் அறிவித்தார்.
உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளித்து வருவதாகவும், 2030ம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத் தக்க எரிசக்தியை உருவாக்குவது என்ற இலக்கை நோக்கி இந்தியா பயணித்து வருவதாகவும் பிரதமர் மோடி விளக்கம் அளித்தார். இங்கிலாந்து பிரதமர் பேசும்போது, இங்கிலாந்தும் இந்தியாவும் இயற்கையான கூட்டாளிகள் எனவும், தங்கள் நாட்டுடன் வர்த்தகம் செய்ய இந்திய தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார்.
இரு நாட்டின் திறமைசாளிகளும் ஒன்றிணைந்து பணியாற்றினால் சிறப்பான வளர்ச்சியை பெறலாம் எனவும் அவர் குறிப்பிட்டார். பிரதமர் மோடியின் இங்கிலாந்து பயணம், தடையில்லா வர்த்த ஒப்பந்தம் கையெழுத்து, அதனை தொடர்ந்து இங்கிலாந்து பிரதமரின் இந்திய வருகை இவை அனைத்தும் இரு நாடுகள் இடையேயான உறவை வலுப்படுத்தியுள்ளன.