கோவையில் கட்டப்பட்டுள்ள தமிழகத்தின் மிக நீளமான ஜி.டி. நாயுடு மேம்பாலத்தைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். 10.10 கிலோமீட்டர் நீளமுள்ள இந்தப் பிரம்மாண்ட பாலம் அவிநாசி சாலை போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
தொழில் நகரான கோவையில் அவிநாசி சாலை மிக முக்கியமான பாதையாகும். விமான நிலையம், கொடிசியா, டைடல் பார்க், பள்ளிகள், கல்லூரிகள் என ஏராளமான நிறுவனங்கள் இயங்கும் இந்தச் சாலை எப்போதும் பரபரப்பாக இருக்கும். போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், 2020ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட இந்தப் பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
1791 கோடி ரூபாய் செலவில், 305 தூண்களுடன் இந்தப் பாலம் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. பாலத்தின் பணிகள் முழுமையாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த ஜி.டி. நாயுடு மேம்பாலத்தைத் திறந்து வைத்தார்.
பின்னர் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்களுடன் பத்து கிலோமீட்டர் தூரம் பாலத்தில் பயணம் செய்தார். தொழில் துறையினருக்கு இந்த மேம்பாலம் மிகுந்த உதவிகரமாக இருக்கும் எனவும், விமான நிலையம் சென்று வருவதற்கும், மற்ற இடங்களுக்குச் செல்வதற்கும் இந்த மேம்பாலம் உபயோகமாக இருக்கும் எனவும் ஜி.டி. நாயுடுவின் மகன் ஜிடி கோபால் தெரிவித்தார்.
பாலத்தில் வாகனங்கள் ஏறுதல் மற்றும் இறங்கும் பகுதிகளில் விபத்து ஏற்படாமல் இருக்க Anti-Crash Roller அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பால இணைப்புகளில் சத்தம் எழாமல் இருக்க ஜெர்மன் டெக்னாலஜியில் Expansion Joint தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பாலத்தின் திட்டம் அறிவிக்கப்பட்டது முதல், பணிகளின் 70% மேற்பார்வையை மாநில நெடுஞ்சாலைத் துறையின் பெண் பொறியாளர்கள் மேற்கொண்டனர்.
வழக்கமாக 45 நிமிடங்கள் எடுத்த பாதையை இப்போது 10 நிமிடங்களில் கடக்க முடிகிறது எனப் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
கோவையின் புதிய அடையாளமாக உருவாகியுள்ள ஜி.டி. நாயுடு மேம்பாலம், தொழில் மற்றும் ஐ.டி. துறைகளுக்கு வரப்பிரசாதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.