சபரிமலை தங்கம் கொள்ளை தொடர்பான விசாரணையை சிறப்பு புலனாய்வு பிரிவு ஆறு வாரங்களுக்குள் முடித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனக் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சபரிமலையில் கடந்த 2019-ம் ஆண்டு துவார பாலகர் சிலைகள் புதுப்பிக்கும் பணிகளுக்காகச் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டன.
பின்னர் பராமரிப்பு பணி முடிந்த நிலையில் புதிய வாசல், நிலை ஆகியவற்றுடன் பொருத்தப்பட்டன.
இந்த நிலையில், மீண்டும் சிலைகள் பராமரிப்பு பணிக்காக இந்த ஆண்டு சென்னை நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அதில் தங்க முலாம் பூசப்பட்ட தகடுகள் மாயமானது கண்டுபிடிக்கப்பட்டது.
தங்கத்தகடுகள் மாயமான சம்பவத்தில் நாளுக்கு நாள் பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்தச் சூழலில், தங்க கவச முறைகேடு வழக்கில் விசாரணையை சிறப்பு புலனாய்வுப் பிரிவு ஆறு வாரங்களுக்குள் முடித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென கேரள உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.