டெல்லியில் தனக்கு நேர்ந்த இனவெறி சம்பவங்களை சுட்டிக்காட்டி மேகாலயாவை சேர்ந்த பெண் வெளியிட்டுள்ள வீடியோ பேசுபொருளாகியுள்ளது.
மேகாலயாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர், 3 ஆண்டுகளாகப் பெங்களூரில் வசித்து வருகிறார். இந்நிலையில் டெல்லியின் கம்லா நகருக்கு சென்றபோது அவரை பார்த்து ஒரு இளைஞர் ‘சிங் சாங்’ என்று கூறியதாகவும் அதைக் கேட்டு உடன் இருந்தவர்கள் சிரித்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து மெட்ரோ ரயிலில் சென்றபோது ‘சிங் சோங் சைனா’ எனக் கூறி ஒருவர் கேலி செய்ததாகவும் தெரிகிறது. சீன மக்களை கேலி செய்வதற்கும், இழிவுபடுத்துவதற்கும் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து வீடியோ வெளியிட்டுள்ள மேகாலயா பெண் ஒரேநாளில் இருமுறை இனவெறி கேலியால் பாதிக்கப்பட்டதாகவும் சொந்த நாட்டிலேயே அந்நியர் எனக் கூறி அவமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவை எப்போதும் வீடுபோல உணர்ந்தேன் எனவும் தலைநகரில் இதுபோன்று நடக்கும் என நினைத்துப் பார்த்ததில்லை என்றும் வேதனையுடன் கூறியுள்ளார்.
இந்த வீடியோவுக்குப் பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, இதுபோன்ற பாகுபாடு நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.