சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வான்வெளி மற்றும் பாதுகாப்பு துறைகளின் AeroDefCon2025 என்ற மூன்று நாள் சர்வதேச மாநாடு நடைபெற்றது. இந்திய பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) மற்றும் தனியார் வான்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களின் புதிய படைப்புகள் காட்சிபடுத்தப்பட்டிருந்தன.
தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதே பிரதமர் நரேந்திர மோடியின் ஆத்மநிர்பாரத் திட்டத்தின் முழு முக்கிய நோக்கமாகும். அந்த வகையில் பாதுகாப்பு தளவாட துறையில் ஏற்கனவே இந்தியாவின் உற்பத்தி திறன் என்பது கடந்த 11 வருடங்களில் பன்மடங்கு உயர்ந்து, தற்போது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யபட்டு வருகின்றது.
இந்திய ராணுவ தளவாடங்களை பொறுத்தவரை எந்த வருடமும் இல்லாத அளவிற்கு கடந்த நிதியாண்டில் ஏற்றுமதி 23,660 கோடி ரூபாய் என்ற உச்சத்தை எட்டியுள்ளது. இது இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி பொருட்கள் மீதான நன்மதிப்பை உலக நாடுகள் மீது கூட்டியுள்ளது. சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் கடந்த 7 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை வான்வெளி மற்றும் பாதுகாப்பு துறைகளின் AeroDefCon2025 என்ற மூன்று நாள் சர்வதேச மாநாடு நடைபெற்றது.
சர்வதேச அளவில் 87 நிறுவனங்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில் இந்திய பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) மற்றும் தனியார் வான்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களின் கற்பனைக்கு அடங்கா புதிய படைப்புகள் அடுத்த 20 ஆண்டுகளுக்கு சர்வதேச அரங்கை அதிரவைக்கும் விதமாக இருந்தன.
இந்திய இராணுவத்திற்காக டி-70, டி-90, அர்ஜுன் வகை டேங்குகளை தயாரிக்கும் சென்னை ஆவடியில் உள்ள Armoured Vehicle Nigam Limited (AVNL) நிறுவனம், டேங்குகள் உற்பத்தியில் 90 சதவிகிதம் இந்திய பொருட்களை பயன்படுத்துக்கிறது.
2028ம் ஆண்டிற்குள் 100 சதவிகிதம் உள்நாட்டு உற்பத்தி என்ற இலக்கை எட்டும் நோக்குடன், இந்திய சந்தையில் குறிப்பிட்ட பொருட்களுக்கான உற்பத்தியாளர்களை வரவேற்கிறது. அதே போல ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தானின் வான்வெளி தாக்குதலை தவிடு பொடியாக்கிய ஆகாஷ் ஏவுகணை, இந்தியாவின் நம்பகத் தன்மை வாய்ந்த நவீன தலைமுறையின் ஆஸ்திரா MK 2 ஏவுகணை, ஹெலிகாப்டர் மூலம் செலுத்தும் ஹெலினா எனப்படும் ஏடிஜிஎம் ஏவுகணை என பல வெற்றிகரமான தயாரிப்புகளை வழங்கி வரும் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனம் 100 சதவிகித இந்திய தயாரிப்புகளுக்கான விற்பனையாளர்களை எதிர்நோக்கியுள்ளது.
இந்தியாவின் பாராசூட் தயாரிப்பு நிறுவனமான கிளைடர்ஸ் இந்தியா லிமிடெட், ஹை ஆல்டிடியூட் மற்றும் லோ ஆல்டிட்யூட் பாராசூட்கள், சாகச விளையாட்டுகளுக்கான பாராசூட்கள் மற்றும் கிளைடர்கள், போர் விமானங்களுக்கான வேகக் கட்டுப்பாட்டு பாராசூட் பிரேக்குகள் அதன் மீதான விழிப்புணர்வை கூட்டும் விதமாக இருந்தன.
தெர்மல் பயர் ஸ்கோப்புகள், ஸ்னைப்பர் ரக ஸ்கோப்புகள், இரவு நேரத்தில் பயன்படுத்தப்படும் நைட் விஷன் கிளாஸ் மற்றும் பிரத்யேக பைனாக்குலர்கள் இந்தியன் ஆப்டிகல் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் 100 சதவிகிதம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவைகளாகும்.
இந்த மாநாட்டில் அவைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. தொழில்துறையினர் மற்றும் உற்பதியாளர்களை கடந்து, இளைஞர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் பார்வையிட்ட இந்தக் கண்காட்சியில், விண்வெளியில் காலாவதியான செயற்கைக்கோள் கழிவுகளை அகற்றுவதற்காகவே, பிரத்யேகமாகக் கண்டுபிடிக்கப்பட்ட உபகரணம் தங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதாக, வானியல் மாணவி பிரஹன்யா தெரிவித்தார்.
இந்தியாவின் எண்ணிலடங்கா கண்டுபிடிப்புகளும், தயாரிப்புகளும் வான்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையில் உலக நாடுகளை திரும்பிப் பார்க்கச் செய்வதே மத்திய அரசின் முக்கிய குறிக்கோளாகும்.
ஆத்மநிர்பாரத் திட்டத்தின் கீழ், விரைவில் 100 சதவிகித உள்நாட்டு பொருட்களை கொண்டு உற்பத்தி மற்றும் பயன்பாடு என்பதை நிஜமாக்க வேண்டும் என மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வரும் நிலையில், அதில் தமிழ்நாட்டின் பங்களிப்பும் பெரியதாக அமைந்துள்ளது.