தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே ஆண் நண்பருடன் மனைவி தலைமறைவானதால், ஆத்திரமடைந்த கணவன் மூன்று குழந்தைகளை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோபாலசமுத்திரத்தை சேர்ந்த ஹோட்டல் சர்வர் வினோத்குமார், தனது மனைவி நித்யா, 12 வயது மகள் ஓவியா, 8 வயது மகள் கீர்த்தி, 5 வயது மகன் ஈஸ்வரன் ஆகியோருடன் வசித்து வந்தார். நித்யாவுக்கு மன்னார்குடியை சேர்ந்த ஒருவருடன் சமூக வலைதளம் மூலமாக தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து அந்த நபருடன் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த வினோத்குமார், மதுபோதைக்கு அடிமையாகி குழந்தைகள் மீதும் வெறுப்பில் இருந்ததாக தெரிகிறது.
சம்பவத்தன்று, மகன் ஈஸ்வரனை கொஞ்சுவது போல் தூக்கிய வினோத்குமார், திடீரென மிருகமாக மாறி குழந்தையை கழுத்தை அறுத்துக் கொலை செய்தார். இதேபோன்று மகள்களையும் துடிக்கதுடிக்க கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
குழந்தைகள் மூவரையும் கொடூரமாக கொன்ற அவர் மதுக்கூர் காவல்நிலையத்தில் சரணடைந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.