ஹரியானாவில் ஐபிஎஸ் அதிகாரி ஏடிஜிபி புரன் குமாரின் தற்கொலைக்குச் சாதிய பாகுபாடே காரணம் என்பது அவரது தற்கொலை கடிதம் மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த 7-ம் தேதி ஹரியானாவின் மூத்த ஐபிஎஸ் அதிகாரியான புரன் குமார், சண்டிகரில் உள்ள செக்டார் 11 இல்லத்தில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். 2001-ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரியான புரன் குமார், ஏடிஜிபியாக இருந்தார்.
ஓர் மூத்த ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை செய்து கொண்ட செய்திகள் வெளியாகி நாடு முழுவதும் பேசுபொருளானது. இந்நிலையில் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் ஐபிஎஸ் அதிகாரி ஏடிஜிபி புரன் குமார் எழுதிய தற்கொலை குறிப்பு கிடைத்துள்ளது.
அதில் சாதிய பாகுபாடால் தான் பொதுவெளியில் பல முறை அவமதிக்கப்பட்டதாகப் புரன் குமார் குறிப்பிட்டுள்ளது தெரியவந்துள்ளது.
தனது கடிதத்தில் சாதிய பாகுபாடு காட்டிய பல்வேறு காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளின் பெயரையும் ஏடிஜிபி புரன்குமார் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே தனது கணவரின் தற்கொலை குறிப்பின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது மனைவி அம்னீத் பி குமார் ஐஏஎஸ் வலியுறுத்தியுள்ளார்.