சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவின் பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டதற்கு அவரது கட்சியை சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
உத்தரப் பிரதேசத்தின் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவை பேஸ்புக் பக்கத்தில் சுமார் 80 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் எந்தவித அறிவிப்புமின்றி அவரது பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
முகநூலின் இந்த முடக்க நடவடிக்கையால் உ.பி.யின் கன்னோஜ் தொகுதி எம்.பியான அகிலேஷ் யாதவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
தம் தலைவரது பக்கத்தை மீண்டும் நிறுவுமாறு பேஸ்புக் நிறுவனத்திடம் சமாஜ்வாதி கட்சி கோரியுள்ளது. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள சமாஜ்வாதி எம்.பி.யான ராஜீவ் ராய், பேஸ்புக்கின் இந்தச் செயல் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல், சோசலிசக் குரல்களை அடக்கும் முயற்சி எனக் கூறியுள்ளார்.
இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியின் தலைவரின் கணக்கு முடக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது எனவும் ராஜீவ் ராய் தெரிவித்துள்ளார். இதே போலச் சமாஜ்வாதி கட்சியினர் பலரும் பேஸ்புக்கின் முடக்க நடவடிக்கையைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.