காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய உட்கட்டமைப்பு விரிவாக்கப் பணிகளை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட காரைக்கால் மீன்பிடி துறைமுகம் மூலம் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 11 மீனவ கிராமத்தினர் பயன்பெற்று வந்தனர்.
இதனையடுத்து துறைமுகத்தை அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்த வேண்டும் எனத் தொடர்ந்து மீனவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதனைத்தொடர்ந்து, காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் 136 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய உட்கட்டமைப்பு விரிவாக்கம் செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி துறைமுக விரிவாக்கப் பணிகளுக்குக் காணொலி காட்சிமூலம் அடிக்கல் நாட்டினார்.
அதனைத்தொடர்ந்து காரைக்காலில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாசநாதன், அமைச்சர்கள் லெட்சுமி நாராயணன், திருமுருகன், தேனி ஜெயக்குமார் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றித் துறைமுக பணிகளை தொடங்கி வைத்தனர்.