தென்னிந்திய உணவுகளில் முக்கியமானதாக இருக்கும் இட்லிக்கு சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்டுக் கூகுள் சிறப்பு சேர்த்துள்ளது.
உலக புகழ்பெற்ற தென்னிந்திய உணவுகளில் இட்லிக்கு முதலிடம் உண்டு. புரதம் மற்றும் தாதுக்களின் நல்ல ஆதாரமான இட்லி செரிமானத்திற்கு எளிதானது.
இட்லி குடலில் நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்பதால், மருத்துவர்களின் உணவுப் பரிந்துரை பட்டியலிலும் தவறாமல் இடம்பிடித்து விடுகிறது.
ரவா இட்லி, காஞ்சிபுரம் இட்லி, குஷ்பு இட்லி, குட்டி இட்லி மற்றும் சேமியா இட்லி எனப் பல்வேறு வகைகளில் கிடைக்கும் இட்லிக்கு தென்னிந்தியர்களின் நாக்கு அடிமையெனவே கூறலாம்.
இந்நிலையில் அத்தகைய இட்லிக்கு சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்டுக் கூகுள் சிறப்பு சேர்த்துள்ளது.
அதில், அரிசி மற்றும் உளுந்து, இட்லி, சாம்பார், சட்னி, இட்லி பொடி முதல் கடைசியாகத் தலைவாழை இலையில் பரிமாறப்படுவது வரையிலும் இடம்பெற்றுள்ளது.
இதுகுறித்து கூகுள் அளித்திருக்கும் விளக்கத்தில், உணவு மற்றும் பானங்களின் டூடுல் கருப்பொருளின் ஒரு பகுதியாக இட்லிக்கான சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.
உடலுக்கு நன்மை பயக்கும் இட்லி குறித்து டூடுல் வெளியிட்ட கூகுளை தென்னிந்தியர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.