இந்திய வனத்துறை அதிகாரி தொடர்ந்த ஊழல் வழக்கை விசாரிக்காமல், உத்தராகண்ட் உயர்நீதிமன்ற நீதிபதி விலகியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தராகண்டைச் சேர்ந்த இந்திய வனத்துறை அதிகாரியான சஞ்சீவ் சதுர்வேதி, அரசின் பல்வேறு மட்டங்களில் நடைபெறும் ஊழல்களுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிறார்.
இவர் பல ஊழல்கள் குறித்து உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளைத் தொடர்ந்துள்ளார். அண்மையில் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்திற்கு எதிராகச் சதுர்வேதி தொடர்ந்த வழக்கு உத்தராகண்ட் உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், வழக்கை விசாரிப்பதில் இருந்து உயர்நீதிமன்ற நீதிபதி அலோக் வர்மா விலகியுள்ளார்.
இதன் மூலம் சதுர்வேதி தொடர்ந்த வழக்குகளில் இருந்து 16-வது முறையாக ஒரு நீதிபதி விலகியுள்ளார். உரிய காரணம் கூறப்படாத நிலையில், ஊழலை மூடி மறைக்க முயற்சி நடப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.