ஈரோடு மாவட்டம் வெள்ளோடு சரணாலயத்தில், இனப்பெருக்கம் செய்ய வரும் பறவைகளை பாதுகாக்கும் வகையில் 19-வது ஆண்டாக பட்டாசு வெடிக்காமல் கிராம மக்கள் தீபாவளியை கொண்டாடவுள்ளனர்.
வெள்ளோட்டில் அமைந்துள்ள பறவைகள் சரணாலயம், சுமார் 240 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கீழ்பவானி வாய்க்காலின் கசிவு நீர் மற்றும் மழை காலத்தில் நீர் வழி ஓடையின் மூலமாக வரும் தண்ணீரையே ஆதாரமாக கொண்டுள்ளது. ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை இங்கு பறவைகளுக்கான சீசன் தொடங்கும்.
இந்நிலையில், உள்நாட்டு பறவைகளான மஞ்சள் மூக்கு நாரை, நத்தை குத்தி நாரை, வெள்ளை அரிவால் மூக்கன் மற்றும் சைபீரியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ரஷ்யா போன்ற நாட்டு பறவைகள் வருகை தர தொடங்கியுள்ளன.
இந்த சூழலில், பறவைகளை பாதுகாக்கும் வகையில் 19-வது ஆண்டாக பட்டாசு வெடிக்காமல் கிராம மக்கள் தீபாவளியை கொண்டாடவுள்ளனர். மேலும், கூட்டம் கூட்டமாக பறவைகள் வருவது கிராமத்திற்கு பெருமை சேர்ப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.