தீபாவளி பண்டிகையையொட்டி காரைக்குடி பகுதியில் செட்டிநாடு கைத்தறி ரக சேலைகள் தயாரிப்பு ஜெட் வேகத்தில் நடந்து வருகிறது. இந்த சேலைகளின் சிறப்புதான் என்ன? பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்…
காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் செட்டிநாடு சமையல், செட்டிநாடு பலகாரங்கள் பிரசித்தி பெற்றவை. இதேபோல் செட்டிநாடு கைத்தறி ரக சேலைகளுக்கும் தனிச் சிறப்பு உண்டு…
காரைக்குடி மற்றும் அதன் அருகே உள்ள பள்ளத்தூர், கானாடுகாத்தான் உள்ளிட்ட பகுதிகளில் கைத்தறி நெசவு தொழிலாளர்கள் செட்டிநாடு காட்டன் சேலைகளை உற்பத்தி செய்கின்றனர். ஆண்டு முழுவதும் கைத்தறி சேலைகள் தயாரிப்பில் இவர்கள் ஈடுபட்டு வந்தாலும் தீபாவளி பண்டிகையையொட்டி சேலைகள் உற்பத்தி மேலும் தீவிரமடைந்துள்ளது. கண்டாங்கி சேலைகள், சுங்குடி சேலைகள், பல்வேறு காலநிலைக்கு ஏற்றவாறு அணியும் சேலைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான கைத்தறி சேலைகள் கனஜோராக தயாரிக்கப்பட்டு வருகின்றன.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் , செட்டிநாடு காட்டன் சேலைகள் தயாரிப்பு, விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. இப்பகுதியை சேர்ந்த நெசவாளர்கள் 3 தலைமுறைகளாக இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக வேலைக்குச் செல்லும் பெண்கள் என பல்வேறு தரப்பினரும் விரும்பி அணியும் சேலையாக செட்டிநாடு காட்டன் சேலைகள் திகழ்கின்றன.
300 கிராம் எடை முதல் செட்டிநாடு கைத்தறி ரக சேலைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அன்னபச்சி ரகம், உத்ராட்சை ரகம், தாழம்பூ பூக்கரை ரகம், செட்டிநாடு ஸ்பெஷல் கோட்டையூரான் பார்டர் ரகம், செல்ப்முந்தி ரகம் உள்ளிட்ட பல டிசைன்களில் சேலைகள் தயாரித்து வருகின்றனர்.
700 ரூபாய் முதல் 7 ஆயிரம் ரூபாய் வரை சேலைகள் விற்பனை செய்யப்படுகின்றன. திருமணத்தின் போது மணப்பெண் அணியக்கூடிய பட்டுச் சேலைகளும் தயார் செய்யப்படுகின்றன. மணப்பெண்ணின் புகைப்படத்தை கொடுத்தால் அந்த படம் சேலையில் வருமாறும் நெய்து தருகின்றனர். காலத்தின் மாற்றத்திற்கு ஏற்றவாறு இளம் பெண்கள் அணியக்கூடிய சுடிதார், சல்வார் வகைகளும் தற்போது தயாரிக்கப்படுகின்றன.
இப்பகுதிக்கு சுற்றுலா வரும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, பர்மா உள்ளிட்ட வெளிநாடு வாழ் தமிழர்களும் செட்டிநாடு கைத்தறி ரக சேலைகளை விரும்பி வாங்கி செல்கின்றனர். தமிழ் பெண்கள் மட்டுமல்லாது வெளிமாநிலம், வெளிநாட்டு பெண்களும் செட்டிநாடு கைத்தறி ரக சேலைகளின் தரம் பற்றி தெரிந்து கொண்டு ஆன்லைன் மூலம் ஆர்டர் கொடுத்து வாங்கி அணிகின்றனர்.
என்றாலும் 3000 தறிகள் வரை இருந்த காரைக்குடி பகுதியில் தற்போது 50 தறிகள் என்ற அளவில்தான் செயல்படுகின்றன. அதிலும் வேறு தொழில் தெரியாத வயதான முதியவர்கள் தான் இந்த தொழிலில் ஈடுபடுகின்றனர்.
நலிவடைந்து வரும் தங்கள் கைத்தறி தொழில் மேலும் வளர மத்திய அரசு கருணையுடன் 5% சதவீதமாக உள்ள GST வரியை தள்ளுபடி செய்தால் போதும் என்கிறார்கள் அவர்கள். தமிழக அரசு அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்கள் வாரத்தில் இரு நாட்கள் கைத்தறி சேலை அணிந்து வர வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டால் நலிந்து வரும் நெசவுத் தொழிலை காப்பாற்றலாம் என்றும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இந்த கைத்தறி நெசவாளர்களின் உழைப்புக்கு மரியாதை அளிக்கும் வகையில் கடந்த 2019-ம் ஆண்டு மத்திய அரசின் சார்பில் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தங்களது மற்ற கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதும் நெசவாளர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.