திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் கூடுதலாக உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சாத்தனூர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு எட்டாயிரத்து 500 கனஅடியாக உள்ளது.
இதன் காரணமாக சாத்தனூர் அணையிலிருந்து விநாடிக்கு எட்டாயிரம் கனஅடிக்கு மேல் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் ஆற்றை கடக்கவோ, ஆற்றில் இறங்கவோ கூடாது எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஓசூர் கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையிலிருந்து தென்பெண்ணை
ஆற்றில் அதிகப்படியான நீர் திறக்கப்பட்டுள்ளதால் நுரைபொங்கி காணப்படுகிறது.
கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு நீர்வரத்து 2 ஆயிரத்து 75 கனஅடியாக உள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி தென்பெண்ணை ஆற்றில் 2 ஆயிரத்து 999 கனஅடிநீர் திறக்கப்பட்டு இருப்பதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஆற்றங்கரையோர மக்களுக்கு மூன்றாவது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நுரை பொங்கி காட்சியளிப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.