சேலத்தில் தீபாவளியை ஒட்டி புத்தாடை வாங்க குவிந்த மக்களால் ஓமலூர் சாலையில் 5 கிலோமீட்டர் தூரத்துக்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நேற்று ஞாயிற்றுக் கிழமை விடுமுறை என்பதால் தீபாவளியை ஒட்டி புத்தாடைகள் வாங்க கடைவீதிகளில் மக்கள் குவிந்தனர்.
அந்த வகையில் சேலம் கடைவீதி, முதல் அக்ரகாரம், இரண்டாவது அக்கிரகாரம், கன்னிகா பரமேஸ்வரி கோயில் பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகளில் கூட்டம் அலைமோதியது. இதன் காரணமாக ஓமலூர் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஐந்து கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். போக்குவரத்தை சரி செய்யும் பணியில் குறைந்த அளவிலான போலீசாரே ஈடுபட்ட நிலையில், வாகன நெரிசலில் ஆம்புலன்ஸ்களும் சிக்கித் தவித்தன.
இதேபோல் திருநெல்வேலியில் ரத வீதிகளில் காலை முதலே மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. வண்ணாரப்பேட்டை பகுதியிலும் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. துணிக்கடைகள் மட்டுமல்லாமல், வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதேபோல், திருநெல்வேலி சந்திப்பு, பாளையங்கோட்டை மார்க்கெட், முருகன்குறிச்சி, சமாதானபுரம் உள்ளிட்ட இடங்களிலும் தீபாவளியை ஒட்டி மக்கள் கூட்டம் அலைமோதியது.