1984-இல் அமிர்தசரஸில் நடைபெற்ற ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் தவறான முறையில் நடத்தப்பட்டது என்றும், அந்தத் தவறுக்காக இந்திரா காந்தி தனது உயிரை இழந்தார் என்றும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஹிமாச்சலப் பிரதேசம், கசௌலியில் பத்திரிகையாளர் ஹரிந்தர் பாவேஜா எழுதிய They Will Shoot You, Madam புத்தகத்தை மையமாகக் கொண்டு குஷ்வந்த் சிங் இலக்கிய விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் ஒருப்பகுதியாக நடந்த கலந்துரையாடலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கலந்துகொண்டார்.
அப்போது, அவரிடம் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் குறித்து எழுப்பிய கேள்விக்கு, தவறான முறையில் நடத்தப்பட்ட ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கையால், இந்திரா காந்தி தனது உயிரை இழந்ததாகக் கூறினார்.
மேலும், அந்த நடவடிக்கை இராணுவம், காவல்துறை, உளவுத்துறை ஆகியவற்றின் கூட்டு முடிவு என்பதால், ஒருவரை மட்டும் குற்றம் சாட்ட முடியாது எனத் தெரிவித்தார்.
ஆபரேஷன் ப்ளூ ஸ்டாருக்குப் பிறகு, இந்திரா காந்தி தனது பாதுகாவலரால் படுகொலை செய்யப்பட்டார்.
அதைத்தொடர்ந்து நடந்த வன்முறை சம்பவத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.