அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்த காசா அமைதி ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்தானது.
இஸ்ரேல்-காசா இடையேயான போர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்மொழிந்த 20 அம்சங்கள் கொண்ட ஒப்பந்தத்தால் முடிவுக்கு வந்துள்ளது. ட்ரம்ப் அறிவித்த காசா அமைதி ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக எகிப்தில் கையெழுத்தானது.
எகிப்தின் ஷர்ம் எல் ஷேக் நகரில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் எகிப்து அதிபர் அப்தெல் ஃபட்டா எல் சிசி தலைமையில் காசா அமைதி மாநாடு நடைபெற்றது.
இதில், ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் மற்றும் 20க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள், அவர்கள் சார்பில் அனுப்பப்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்தியாவின் சார்பில் வெளியுறவுத்துறை இணையமைச்சர் கிர்த்தி வர்தன் சிங் கலந்து கொண்டார்.
மாநாட்டில், காசா அமைதி ஒப்பந்தத்தில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டார். அதைத் தொடர்ந்து, ட்ரம்ப் தலைமையில், உலகத் தலைவர்கள் ஆதரவுடன் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
காசா அமைதி மாநாட்டில் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இது மத்திய கிழக்கைத் தாண்டி உலக வரலாற்றில் ஒரு முக்கியமான தருணம் என்று கூறினார்.
காசாவுக்கு ஆதரவு வழங்கி மக்களை உயர்த்த அனைவரும் ஒப்புக்கொண்டதாகக் கூறிய அவர், காசா மறுசீரமைக்கப்பட வேண்டியதையும் சுட்டிக் காட்டினார்.
மக்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்க அனைவரும் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
காசாவில் நடந்த போர், பல வருட துன்பங்களுக்குப் பிறகு தற்போது முடிந்துள்ளதாகக் கூறிய அவர், மனிதாபிமான உதவிகள் பெருமளவில் வந்து கொண்டிருப்பதாகவும், அதற்காக அமைதி மாநாட்டில் பங்கேற்ற பல நாடுகள் நிதி வழங்கியுள்ளதாகவும் கூறினார்.
காசாவில் மறுசீரமைப்பு தொடங்குவதாகக் கூறிய ட்ரம்ப், ஒரு புதிய நாள் உதயமாகும் காட்சி அழகாக உள்ளதாகக் குறிப்பிட்டார்.
தான் ஒரு சிறந்த எதிர்காலத்தை உறுதிசெய்வதில் பங்குதாரராக இருக்க விரும்புவதாகக் கூறிய அவர், 3ஆம் உலகப் போர் நடைபெறாது என நம்புவதாகவும் தெரிவித்தார்.
இந்தியா ஒரு சிறந்த நாடு என்றும், பிரதமர் மோடி தனக்கு மிகவும் நெருக்கமான நண்பர் எனவும் கூறிய அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடி அற்புதமான பணியைச் செய்துள்ளதாகவும் பாராட்டினார். பாகிஸ்தானும் இந்தியாவும் இனி நல்லுறவுடன் இருக்கப் போவதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டார்.