ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூகுள் நிறுவனம் அமைக்க உள்ள ஏஐ மையம் குறித்து பிரதமர் மோடியிடம் சுந்தர் பிச்சை விளக்கமளித்தார்.
அமெரிக்காவுக்கு வெளியே உலகின் மிகப் பெரிய செயற்கை நுண்ணறிவு மையத்தைக் கூகுள் நிறுவனம் இந்தியாவில் அமைக்க உள்ளது.
இதற்காக இந்தியா வந்துள்ள கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர்பிச்சை, பிரதமர் மோடியை சந்தித்துத் திட்டம் குறித்து விவரித்தார்.
தொடர்ந்து சந்திப்பு குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள சுந்தர்ப் பிச்சை, கூகுள் ஏஐ மையம் குறித்த திட்டங்களை, பிரதமர் மோடியுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்துள்ளார்.
அதேபோல் இந்தத் திட்டம் ஒரு மைல்கல் வளர்ச்சி என்றும், இது ஜிகாவாட் அளவிலான கணினி திறன், பெரிய அளவிலான எரிசக்தி உள்கட்டமைப்பை ஒருங்கிணைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்தத் திட்டத்தின் மூலம், நாடு முழுவதும் வளர்ச்சிக்கான உந்துதலை அளிப்போம் என்றும் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.