தீபாவளி பண்டிகையைச் சுவையோடு கொண்டாடும் வகையில், சிறுதானியங்களைக் கொண்டு விதவிதமான பலகாரங்களைச் செய்து அசத்தி வருகிறது உதகையில் உள்ள மகளிர்ச் சுய உதவிக்குழு. அதிரசம், முறுக்கு என நாசியைத் துளைக்கும் பலகாரங்கள் அவற்றைச் சுவைக்கவும் தூண்டுகின்றன.
தீபாவளி என்றாலே பட்டாசு அடுத்தபடியாக நம் நினைவுக்கு வருவது பலகாரங்கள்தான்… வீட்டில் பழமை மாறாமல், அம்மாவின் கைப்பட தயாரிக்கப்படும் அதிரசம், முறுக்கு, தேன்குழல், மிட்டாய் போன்ற பலகாரங்களை இப்போது நினைத்துப் பார்த்தாலும் அதனைச் சுவைக்க தூண்டும்.
தற்போதைய நவீனக் காலத்தில் பண்டிகை நாட்களில் கடைகளில் பலகாரங்கள் வாங்கிச் சாப்பிடவே பலரும் விரும்புகின்றனர்… அவர்களின் நாவிற்கு ருசியாக, பலகாரங்களை அடுக்கி வைத்திருக்கிறது உதகையில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு.
அதிரசம், முறுக்கு, சீடை, தட்டை, லட்டு, பாதுஷா போன்ற பல்வேறு விதமான பலகாரங்களை ராகி, கம்பு போன்ற சிறுதானியங்களில் செய்து விற்பனைக்காக வைத்திருக்கின்றனர்… வீட்டில் சமைக்க வேண்டும் என்றால் பலகாரத்திற்குத் தேவையான ரெடிமேட் மாவையும் இவர்கள் விற்பனைச் செய்து வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, உடலுக்கு ஆரோக்கியமான சிறுதானியங்களில் செய்த பலகாரங்களை விற்பனைச் செய்து வருவதாகவும், பலரும் இங்கு வந்து வாங்கிச் செல்வதாகவும் மகளிர்ச் சுய உதவிக்குழுவினர்த் தெரிவித்தனர்.
பீட்சா, பர்கர் போன்ற வெளிநாட்டு உணவு பொருட்களின் ஆதிக்கம் உள்ள நகர வாழ்க்கையில் கம்பு, திணை, கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானிய வகைகள் அழிந்து வருகின்றன. தற்போது இது பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்துள்ள நிலையில், தீபாவளிக்குச் சிறுதானிய பலகாரங்களை வாங்கி ருசிக்கலாமே.