பட்டியலினத்தவர் குறித்து அவதூறாகப் பேசி வீடியோ வெளியிட்ட வழக்கில் 3 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த நடிகை மீரா மிதுன் நேரில் ஆஜரானதையடுத்து, அவர்மீதான பிடிவாரண்ட் உத்தரவைச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் திரும்பப் பெற்றுள்ளது.
பட்டியலினத்தவர் குறித்து அவதுாறாக பேசி, சமூக வலைதளத்தில், வீடியோ வெளியிட்டதாகக் கடந்த 2021 ஆம் ஆண்டு நடிகை மீரா மிதுன் மீது விசிக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் புகார் அளித்திருந்தன.
அதனடிப்படையில், மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தைத் தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைதான நிலையில், ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இதனையடுத்து, தொடர்ந்து நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாததால், மீரா மிதுனுக்கு எதிராக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிடி வாரண்ட் பிறப்பித்தது.
இதனிடையே, மீரா மிதுன், டெல்லியில் உள்ள காப்பகத்தில் இருப்பது தெரியவந்ததை அடுத்து, அவரை கைது செய்து ஆஜர்படுத்த முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், நீதிமன்றத்தில் மீரா மிதுன் நேரில் ஆஜரானார்.
அப்போது காவல்துறை தரப்பில், நடிகை மீரா மிதுன் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் அவருக்கெதிராகப் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை திரும்பப் பெறுவதில் தங்களுக்கு எந்த வித ஆட்சேபனை இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, மீராமிதுனுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டிருந்த பிடிவாரண்ட் உத்தரவை திரும்பப் பெறுவதாகத் தெரிவித்த நீதிபதி வழக்கின் விசாரணையை நவம்பர் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.