சொத்து வரி முறைகேடு விவகாரத்தில் மதுரை மேயர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், புதிய மேயர் தேர்வுகுறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை மாநகராட்சியில் வணிக வளாகங்கள், தொழில் நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்ட சொத்துகளுக்கு வரியை குறைத்து மதிப்பீடு செய்து, அதன் மூலம் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பான புகாரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், முன்னாள் உதவி ஆணையர், பில் கலெக்டர், வருவாய் உதவியாளர் எனப் பலர் கைது செய்யப்பட்ட நிலையில், புகாரில் தொடர்புடைய பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
சொத்து வரி முறைகேடு புகாரில் 5 மண்டல தலைவர்கள், 2 நிலைக்குழு தலைவர்கள் ராஜினாமா செய்த நிலையில், மேயர் கணவரும், திமுக நிர்வாகியுமான பொன் வசந்த் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
200 கோடி ரூபாய் வரி விதிப்பு முறைகேடுக்கு மூலக்காரணமே மேயர் இந்திராணி எனக்கூறி எதிர்க்கட்சிகள் போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில், மேயர் பதவியில் இருந்து இந்திராணி திடீரென விலகினார்.
குடும்ப சூழ்நிலை காரணமாக மேயர் பதவியை ராஜினாமா செய்வதாக இந்திராணி கடிதம் வழங்கியுள்ள நிலையில், புதிய மேயர் தேர்வுகுறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், திமுக பெண் கவுன்சிலர்களில் ஒருவருக்குத்தான் மேயர் பொறுப்பு வழங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.