தீபாவளியை ஒட்டி நெல்லையில் மாப்பிள்ளை சம்பா அரிசியில் தயாராகும் முறுக்குகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மாப்பிள்ளை சம்பா அரிசி முறுக்கு மக்கள் மத்தியில் தனியிடம் பிடித்தது எப்படி? பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்…
திருநெல்வேலி என்றாலே அல்வாவுக்கு பெயர் பெற்ற நகரம்தான். ஆனால் நெல்லை டவுனில் விதவிதமாக தயாரிக்கப்படும் முறுக்குகள்தான் தற்போதைய ஹாட் டாபிக்காக உள்ளன. பாரம்பரியமிக்க பொருட்களை பயன்படுத்தி மாப்பிள்ளை சம்பா அரிசியில் தயாரிக்கப்படும் இந்த முறுக்குகளுக்கு மக்கள் மத்தியில் மகத்தான வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கை சுத்து முறுக்கு, தேன் குழல் முறுக்கு உள்ளிட்ட பல்வேறு முறுக்குகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. என்றாலும் மாப்பிள்ளை சம்பா முறுக்குக்கு கூடுதல் வரவேற்பு…தூத்துக்குடி,கன்னியாகுமரி, மதுரை, சென்னை, சேலம், கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாப்பிள்ளை சம்பா முறுக்கை வாங்கிச் செல்கின்றனர்.
மாப்பிள்ளை சம்பா அரிசி நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்…. உடல் சோர்வைக் குறைக்கும்…ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்…. செரிமானத்தை மேம்படுத்தும் என உடலுக்கு தேவையான பல்வேறு நன்மைகளை தருகிறது. நார்ச்சத்து, இரும்புச்சத்து, தாதுக்கள், வைட்டமின்கள் உள்ளிட்டவையும் அடங்கியிருக்கின்றன. மாப்பிள்ளை சம்பா அரிசியின் தனித்துவமான சிவப்பு நிறம் அதன் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகளுக்கும் காரணமாக இருக்கிறது… எனவே தான் மாப்பிள்ளை சம்பா முறுக்குக்கு மவுசு அதிகரித்துள்ளதாக கூறுகிறார்கள் விற்பனையாளர்கள்.
இந்நிலையில்தான் நெல்லையில் மாப்பிள்ளை சம்பா முறுக்குகளை மக்கள் போட்டி போட்டு வாங்கிச் செல்கின்றனர். மாப்பிள்ளைகள் மட்டுமல்ல.. அனைத்து பிள்ளைகளும் இந்த முறுக்குகளை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதே அவர்களது கருத்தாக இருக்கிறது.