டி.ஆர்.பி ராஜா அமைச்சரைப் போல பேச வேண்டும், மாறாக குடுகுடுப்பைக்காரரை போல பேசக்கூடாது என பாமக தலைவர் அன்புமணி விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு ஃபாக்ஸ்கான் நிறுவனம் உறுதியளித்த 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் கண்டிப்பாக வரும் என தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறியிருப்பதாகவும், அந்த முதலீடுகள் எப்படி வரும்? என்பதைத் தான் அவர் கூற மறுப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அமைச்சர் கூறுவதைப் பார்க்கும் போது, நல்ல காலம் பொறக்குது எனகுடுகுடுப்பைக்காரர் கூறுவதைப் போலத் தான் இருப்பதாகவும், டி.ஆர்.பி. ராஜா அமைச்சரைப் போல தெளிவாகக் கூற வேண்டும் என்றும் ஜோதிடம் கூறுவதைப் போல பேசிக் கொண்டிருக்கக்கூடாது என்றும் விமர்சித்துள்ளார்.
ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தொழில் முதலீடுகள் குறித்த சிக்கலில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா நிமிடத்திற்கு நிமிடம் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருப்பதாகவும், கடந்த 14-ஆம் தேதி இந்த விவகாரம் தொடர்பான தனது குற்றச்சாட்டுக்கு தர்க்கரீதியாக எந்த விளக்கத்தையும் அளிக்க முடியாத அமைச்சர், தேவையில்லாமல் குடும்ப சிக்கலை இழுத்ததாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.