முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரளாவிற்கு வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து கடந்த இரண்டு நாட்களில், அணையின் நீர்மட்டம் 7 அடியாக உயர்ந்துள்ளது.
ரூல்கர்வ் அட்டவணைப்படி அக்டோபர் 20ஆம் தேதிவரை அணை நீர்மட்டம் 137 அடியாகவும், அக்டோபர் 30ஆம் தேதிவரை 138 அடியாகவும் பராமரிக்கப்பட வேண்டும் என விதி உள்ளது.
அதன்படி, அணையின் நீர் மட்டத்தைக் கட்டுக்குள் வைக்கும் நோக்கில் கேரளாவிற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
விநாடிக்கு ஏழாயிரத்து 163 கன அடியாக இருந்த நீர்திறப்பு, தற்போது ஒன்பதாயிரத்து 403 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால், நீர் வல்லக்கடவு, சப்பாத்து, உப்பு தரை, ஐயப்பன் கோயில் வழியாக இடுக்கி அணைவரை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.