பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகள் உடனடி போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கத்தார் அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையே சமீப காலமாக மோதல்போக்கு நிலவுகிறது. குறிப்பாக தெஹ்ரீக்-இ-தலீபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பினருக்கு அடைக்கலம் கொடுப்பதாக ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் குற்றம்சாட்டுகிறது.
இது தொடர்பான மோதலில் இரு தரப்பிலும் ராணுவ வீரர்கள் உள்பட ஏராளமானோர் பலியாகினர். பின்னர் கத்தார் தலையீட்டால் இரு நாடுகளும் தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன.
இருந்தபோதும் ஆப்கானிஸ்தானின் பக்டிகா மாகாணத்தில் 3 இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய வான்தாக்குதலில் 8 பேர் பலியாகினர்.
இந்த நிலையில், பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் ஆகிய இருநாடுகளும் அமைதிப் பேச்சு நடத்த முன்வர வேண்டும் எனக் கத்தார் மீண்டும் அழைப்பு விடுத்து இருந்தது. அதன்பேரில், கத்தார் மற்றும் துருக்கியின் மத்தியஸ்தத்தில் தோஹாவில் பேச்சுவார்த்தை நடந்தது.
ஆப்கன், பாகிஸ்தான், துருக்கி மற்றும் கத்தார் நாடுகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர். இதில் பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாகக் கத்தார் அறிவித்துள்ளது.