மேற்குவங்கத்தில் உள்ள சர்ச்சைக்குரிய ஆதீனா மசூதிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.யுமான யூசுப் பதான் சென்றதும், சமூக வலைதளங்களில் அவரது பதிவும் சர்ச்சையாகியுள்ளது… அது ஆதினா மசூதி அல்ல, ஆதிநாத் கோயில் என்று பாஜகவினர் எதிர்வினையாற்றி உள்ள நிலையில், அதற்கான காரணம் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்…
மேற்குவங்க மாநிலம் மால்டாவில் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது பழமையான ஆதீனா மசூதி… இங்கு முன்னாள் கிரிக்கெட் வீரரும், திரிணாமுல் எம்.பி.யுமான யூசுப் பதான் சென்றிருந்தார். அங்கிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்த அவர், ஆதீனா மசூதி கட்டடக்கலையின் அற்புதம் என்று கூறியிருந்தார்.
ஆதீனா மசூதி 14ம் நூற்றாண்டில் இலியாஸ் ஷாஹி வம்சத்தின் இரண்டாவது ஆட்சியாளரான சுல்தான் சிக்கந்தர் ஷாவால் கட்டப்பட்ட ஒரு வரலாற்று சிறப்புமிக்க மசூதி. கிபி 1373-75ம் காலக்கட்டத்தில் கட்டப்பட்ட ஆதீனா மசூதி, அந்தச் சமயத்தில் இந்திய துணைக்கண்டத்தின் மிகப்பெரிய மசூதியாக இருந்தது.
இது பிராந்தியத்தின் கட்டடக்கலை மகத்துவத்தை வெளிப்படுத்துகிறது என்று தனது எக்ஸ் தள பதிவில் யூசுப் பதான் குறிப்பிட்டிருந்தார்., யூசுப் பதானின் பதிவுகுறித்து எதிர்வினையாற்றியுள்ள மேற்குவங்க பாஜக, அது ஆதீனா மசூதி அல்ல, ஆதிநாத் கோயில் என்று தெரிவித்துள்ளது. பாஜக மற்றும் சமூக ஊடக பயனர்களிடமிருந்தும் எதிர்ப்புகள் எழுந்தன… அது ஆதிநாத் கோயில் என்றும், அதன் மீது மசூதி கட்டப்பட்டது என்று அவர்கள் பதிவிட்டனர். அதே நேரத்தில் வரலாற்று குறிப்புகள் மற்றும் ஆதீனா மசூதியில் உள்ள வெளிப்படையாகத் தென்பட்ட விநாயகர், சிவன் போன்ற கடவுள்களின் படங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.
மசூதியின் வெளிப்புறத்தில் யானைகள், நகரும் சிற்பங்கள் உள்ளதையும் பயனர்கள் கோடிட்டு காட்டினர்.. 2022 ஆம் ஆண்டு பாஜக மாநில துணைத் தலைவர் ரதீந்திர போஸ், ஆதிநாத் மந்திர், மசூதி கட்டமைப்பின் கீழ் புதைக்கப்பட்டதாக ட்வீட் செய்தபோது, கோயில் – மசூதி தகராறு முதன்முதலாக வெடித்தது.
வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி பிரச்னை உள்பட பல்வேறு மாநிலங்களில் கோயில் – மசூதி சர்ச்சைகள் வெடித்தபோது, இந்தப் பதிவும் சர்ச்சையைக் கிளப்பியது. 2024ம் ஆண்டு, ஹிரன்மோய் கோஸ்வாமி என்பவர், ஆதீனா மசூதி வளாகத்தில் பக்தர்களை அழைத்துச் சென்று பூஜை செய்தபோது, இந்தப் பிரச்னை மீண்டும் வெளிச்சத்திற்கு வந்தது.
பல ஆண்டுகளாக, பல தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வரலாற்று ஆசிரியர்கள் இந்த மசூதி, இந்து மற்றும் புத்த ஆலயங்களின் இடிபாடுகளைப் பயன்படுத்தி கட்டப்பட்டதாகக் கூறி வருகின்றனர். ஆதீனா என்ற சொல் சிவனின் மற்றொரு பெயரான ஆதிநாத் என்பதிலிருந்து வந்தது என்றும் தெரிவிக்கின்றனர். மசூதியின் அடித்தளம் ஆரம்பகால இந்து கோயில்களைப் போலவே கனமான பாசால்ட் கற்களால் அமைக்கப்பட்டுள்ளது என்பதும் அவர்களின் கூற்றாக உள்ளது.
1880ம் ஆண்டைச் சேர்ந்த பிரிட்டிஷ் பொறியியலாளரும் தொல்பொருள் ஆராய்ச்சியாளருமான அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் மற்றும் வங்காளதேச வரலாற்று ஆசிரியர் எஸ்.கே. சரஸ்வதி ஆகியோர் மசூதி கட்டுமானத்தில் இந்து ஆலயங்களிலிருந்து பொருட்களைப் பயன்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
பதானின் பதிவு, ஒரு சுற்றுலா தலத்திற்கு அவர் சென்றது குறித்த கவனக்குறைவான பதிவாக இருக்கலாம், ஆனால், அது மேற்கு வங்கத்தின் பழமையான, உணர்வுபூர்வமான கோயில் – மசூதி விவாதத்தை மீண்டும் உயிர்ப்பித்துள்ளது. எனினும் தொல்லியல்துறை ஆதீனா மசூதி தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமாகவே உள்ளது என்று கூறுகிறது.