பஞ்சாப் மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கட்டுக்கட்டாகப் பணம், கிலோ கணக்கில் தங்கம் சிக்கியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது. லஞ்சத்தில் ஊறி திளைத்த அந்த அதிகாரி யார் என்பதை தற்போது பார்க்கலாம்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த டிஐஜி ஹர்சரண்சிங் புல்லர்தான் ஊழல் குற்றச்சாட்டில் கைதாகி சிபிஐ பிடியில் வசமாகச் சிக்கியவர். 2009 பேட்ஜ்-ஐ சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஹர்சரண் சிங் புல்லர், 8 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில், சிபிஐ அதிகாரிகளால் கையும் களவுமாகச் சிக்கியிருக்கிறார்.
பழைய வழக்கை முடித்து வைப்பதற்காக ரோப்பர் சரக டிஐஜி ஹர்சரண் சிங் புல்லர், இடைத்தரகர் மூலம் பேரம் பேசியதாகவும், மாதந்தோறும் 8 லட்சம் லஞ்சம் கோரியதாகவும் ஃபதேஹ்கர் சாஹிப் மாவட்டத்தைச் சேர்ந்த இரும்பு வியாபாரி ஆகாஷ் பட்டா என்பவர் அண்மையில் சிபிஐ-யில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.
அதன் பேரில், டிஐஜி-யின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்து வந்த சிபிஐ அவரை கையும் களவுமாகப் பிடிக்க நேரம் பார்த்துக் காத்திருந்தது. இந்த நிலையில், மொஹாலியில் உள்ள தனது அலுவலகத்தில், முதல் தவணை பணத்தை வழங்குமாறு ஆகாஷை ஹர்சரண்சிங் அழைத்திருக்கிறார்.
அதிகாரிகளின் ஆலோசனையின்படி அங்கு ஆகாஷ் அங்குச் சென்றபோது, சிபிஐ வைத்த பொறியில் டிஐஜி ஹர்சரண்சிங் சிக்கிக் கொண்டார். தொடர்ந்து ஹர்சரண்சிங் புல்லரின் அலுவலகம், வீடுகளில் அங்கும் அங்குலமாகச் சோதனையிட்ட சிபிஐ அதிகாரிகள், அவரது இடைத்தரகர் கிருஷ்ணா என்பவரையும் கைது செய்தனர்.
அதன் தொடர்ச்சியாகப் பஞ்சாப் மற்றும் சண்டிகரில் உள்ள டிஐஜி ஹர்சரண் சிங் புல்லருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது… அதில் கட்டுக்கட்டாக 5 கோடி ரூபாய் ரொக்கம், ஒன்றரை கிலோ தங்க நகைகள், ஆடி, மெர்சிடிஸ் போன்ற சொகுசு கார்கள், 22 ஆடம்பர கைக்கடிகாரங்கள், 40 லிட்டர் வெளிநாட்டு மதுபானம், துப்பாக்கிகள், வெடிமருந்துகள் என அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், அசையா சொத்துகள் தொடர்பான ஆவணங்களும் சிபிஐ வசம் சிக்கியுள்ளது. 2009ம் ஆண்டு பஞ்சாப் பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான ஹர்சரண்சிங் புல்லர், முன்னாள் பாதுகாப்பு டிஐஜி மேஹல் சிங் புல்லரின் மகன்.
மொஹாலி காவல்துறை கண்காணிப்பாளர், பட்டியலா சரக காவல்துறை துணைத் தலைவர் போன்ற பதவிகளை வகித்தவர். குறிப்பாகப் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு தொடர்பாக அகாலி தளம் கட்சித் தலைவர் விக்ரம் சிங் மஜிதியாவை விசாரித்த சிறப்பு புலனாய்வுக்குழுவுக்கு தலைமை தாங்கியவர்.
இப்போது பல்வேறு பொறுப்புகளை வகித்த ஹர்சரண்சிங் ஊழல் வழக்கில் சிபிஐ அதிகாரிகளின் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளார். வேலியே பயிரை மேய்ந்த கதையாக மக்களைப் பாதுகாக்க வேண்டிய உயர் பொறுப்பில் உள்ள ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் ஊழல் வழக்கில் கையும் களவுமாகச் சிக்கியிருப்பது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.