தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
அதிகபட்சமாகப் பணகுடி அருகே உள்ள வடக்கன்குளம் பகுதியில் மிகக் கனமழை பதிவாகியுள்ளது. இரவு முழுவதும் இடி, மின்னலுடன் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டித் தீர்த்தது.
ஒரே நாளில், வடக்கன்குளத்தில் மட்டும் 19 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதி கனமழை காரணமாக, வடக்கன்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சாலைகள் வெள்ளக்காடாகக் காட்சியளித்தன.
பல இடங்களில் சாலைகளில் இரண்டு அடி உயரத்திற்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.
நாளைத் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பண்டிகைப் பொருட்களை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.