பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணை மூடப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பவானி வாய்க்காலுக்கு 800 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்பட்டுள்ள நிலையில் பவானி ஆற்றங்கரையோரம் உள்ள சத்தியமங்கலம் புளியம்பட்டி திம்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கொடிவேரி அணை வழியாக சுமார் 7000 முதல் 8000 கன அடி தண்ணீர் வெளியேறிவிடுகிறது
இதனால் கொடிவேரி அணை மூடப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் தடை விதித்து உள்ளனர். ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறையும் வரை சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமின்றி பவானி ஆற்றில் இறங்கி குளிக்கவோ, துணி துவைத்தல், கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லுதல், பரிசல் பயணம் செய்தல் ஆகியவற்றிற்கும் தடை விதித்து உள்ளனர்.
பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் கரையோரங்களில் உள்ள பங்களாபுதூர், வாணிப்புத்தூர், அடசப்பாளையம், மேவாணி, கொடிவேரி, நஞ்சை புளியம்பட்டி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் வருவாய்த்துறையினர் மற்றும் பங்களாபுதூர், கோபி, கடத்தூர் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
அதே போன்று நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள், பணியாளர்கள் கொடிவேரி அணை மற்றும் படித்துறைகளிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்