தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மிகக் கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகத் தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
இது, மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 23 ஆம் தேதிக்குள் தென் மத்திய வங்கக் கடலை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதனால் ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்று மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதேபோல் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமாரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 15 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
தெற்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.