AWS எனப்படும் அமேசான் வெப் சர்வீசஸ் அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு இணைய உலகத்தையே முடக்கிப் போட்டுவிட்டது… பல முன்னணி நிறுவனங்களின் செயலிகளையும் AWS செயலிழக்கச் செய்ததால் பயனர்கள் பெரும் சிக்கலைச் சந்திக்க நேரிட்டது. இதற்கான காரணம் என்ன? விரிவாகப் பார்க்கலாம்…
AMAZON WEB SERVICES என்பதன் சுருக்கம் தான் AWS. அமேசான் நிறுவனத்தின் கிளவுட் கம்ப்பூட்டிங் பிரிவான AWS-ஐ சார்ந்துதான் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான இணையதளங்கள் இயக்கத்தைப் பெறுகின்றன. உதாரணமாக ஒவ்வொரு ஸ்மார்ட்போனிலும் உள்ள பலவிதமான செயலிகள் AWS தரவு மையங்களில் இருந்தே இயங்குகின்றன.
அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இத்தளத்தில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு, பல கோடி பேர் பயன்படுத்தும் செயலிகளை முடக்கிப் போட்டது. Amazon.com, Prime Video, Alexa, Snapchat, OpenAI, Perplexity AI, Apple TV Google, Google Maps, YouTube, Google Drive, Mailchimp, WhatsApp, Disney+ உள்ளிட்ட பல்வேறு செயலிகள், மற்றும் பல்வேறு நிறுவனங்களின் தளங்கள் AWS கோளாறால் முடங்கின.
இதன் காரணமாக அதனைப் பயன்படுத்தி வந்த கோடிக்கணக்கான பயனர்கள் பாதிப்பை எதிர்கொள்ள நேரிட்டது. இதனை அமேசான் உறுதிபடுத்திய நிலையில், ஸ்னாப்ஷாட், டூலிங்கோ, ரோப்ளாக்ஸ் போன்ற செயலிகளின் வேகமும் குறைந்தது. டவுண்டிடெக்டர் இணையதள தரவுகளின்படி, மேற்குறிப்பிட்ட செயலிகள், தளங்களில் பிரச்னை அதிகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் Amazon.com, Alexa, Canva, Perplexity AI, Snapchat போன்ற தளங்களைப் பயன்படுத்த முடியாமல் போனதால், விடுமுறை நாட்களில் அத்தளங்களை அதிகம் பயன்படுத்துவோர் சிக்கலை எதிர்கொள்ள நேரிட்டது.
இதுதொடர்பான அடுக்கடுக்கான புகார்கள் சங்கிலித் தொடர் போன்று தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டது. AWS-இல் US-EAST-1 பகுதியில் ஏற்பட்ட தொழில்நுட்பச் சிக்கலே இந்தக் குழப்பத்திற்குக் காரணம் என்பது பின்னர் தெரியவந்தது. AWS நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான Service Health Dashboard இந்தக் கோளாறை உறுதிப்படுத்தியது.
வடக்கு விர்ஜினியாவில் அமைந்துள்ள US-EAST-1 பிராந்தியத்தில், AWS சேவையில் பிழைகள் அதிகரித்ததாகவும், வேகம் குறைந்ததாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டது. AWS-ன் மிகப்பெரிய உட்கட்டமைப்பை ஹோஸ்ட் செய்யும் இப்பகுதியில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகள், சர்வதேச அளவில் பல தளங்களில் அடியோடு பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
இந்தச் செயலிழப்பிற்கான மூல காரணத்தைக் கண்டறிந்துள்ள AWS நிறுவனம், மீட்புப் பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டுள்ளது. இது ஒரு இணையப் பாதுகாப்புத் தாக்குதல் அல்ல, உள்நாட்டு தொழில்நுட்பக் கோளாறு என்றே ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்தச் செயலிழப்பு காரணமான விரக்தியடைந்த பயனர்கள், சமூக வலைதளங்களில் இது தொடர்பான மீம்ஸ்களையும், குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வருகின்றனர்.