திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் காட்டுக் கோயிலுக்கு வழிபாட்டுக்காகச் சென்ற பக்தர்களைத் தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தும், நீர்நிலைகள் நிரம்பியும் வருகிறது.
இதன் ஒரு பகுதியாக வாணியம்பாடி அருகே உள்ள பாலாற்றில் அதிகமான நீரோட்டம் இருந்தது. இதற்கிடையே ஜோதி நகரில் உள்ள காட்டுக்கோயிலில் வழிபாடு நடத்துவதற்காகப் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் 17 பேர் வருகை தந்திருந்தனர்.
அப்போது பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அவர்களால் வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டது.
இதனையறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கயிறுமூலம் பக்தர்களைப் பாதுகாப்பாக மீட்டனர்.