சண்டிகரில் தீபாவளி போனஸாக நிறுவன உரிமையாளர், ஊழியர்களுக்குச் சொகுசு கார்களை வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சண்டிகரை சேர்ந்த எம்கே பாத்தியா என்பவர் மருந்து நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
கடந்த 2002 ஆம் ஆண்டு இவரின் மருந்து நிறுவனம் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு திவால் நிலையைச் சந்தித்தது. ஆனால், 2015 இல் அவரது நிறுவனம் மீண்டெழுந்து வணிக ரீதியாக நல்ல நிலையை எட்டியது.
தற்போது 12 நிறுவனங்களுக்குத் தலைவராக உள்ள பாத்தியா தனது வியாபாரத்தை வெளி நாடுகளுக்கும் விரிவுபடுத்தி உள்ளார். இதற்குக் காரணம் தனது ஊழியர்களே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவர் தனது மருந்து நிறுவனத்தில் பணியாற்றும் 51 ஊழியர்களுக்குச் சொகுசு காரை வாங்கி பரிசளித்துள்ளார்.
ஊழியர்களின் விருப்பப்படி சொகுசு கார்களை வழங்கியது அவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
வருடம் முழுவதும் உழைக்கும் ஊழியர்களுக்குத் தீபாவளி போனஸ் கூடத் தராத நிறுவனங்களுக்கு மத்தியில், ஊழியர்களுக்குக் கார் பரிசளித்த உரிமையாளரின் செயலைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.