எத்தனாலை புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் ஒரு ஆபத்தான பொருளாக வகைப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாகச் சானிடைசர்களைத் தடை செய்யக்கூடிய நடவடிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
மது அருந்துவது புற்றுநோயை ஏற்படுத்தும் என்பதற்கு வலுவான அறிவியல் சான்றுகள் உள்ளன. 1987-ல் மதுவை புற்றுநோயை உண்டாக்கும் முதன்மையான காரணமாகப் புற்றுநோய்க்கான சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் வகைப்படுத்தியது. 2000ஆம் ஆண்டில், தேசிய நச்சுயியல் திட்ட அறிக்கையிலும், மதுபானங்களை உட்கொள்வது புற்றுநோயை ஏற்படுத்தும் என்று கூறப் பட்டிருந்தது.
குறிப்பாக, மதுபானங்களில் உள்ள எத்தனால் (Acetaldehyde) புற்றுநோய் உண்டாக்கும் ஒரு நச்சு இரசாயனம் என்று வகைப்படுத்தப்பட்டது. ஆல்கஹால் புற ஊதா கதிர்வீச்சை விட ஆற்றல் அதிகம் கொண்டதாகும். இது 5 சதவீதம் புற்றுநோய் வருவதற்கும், 1.5 சதவீதம் புற்றுநோய் மரணங்களுக்கும் காரணமாகிறது என்று ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
2021ம் ஆண்டு வர்ஜீனியா பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் , மது அருந்துவது புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் என்பது பெரும்பாலான அமெரிக்கர்களுக்குத் தெரியாது என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளது. மது அருந்துதல் புற்றுநோயை ஏற்படுத்தும் என உலக சுகாதார நிறுவனமும் தெரிவித்துள்ளது. புற்றுநோய் என்பது ஐரோப்பிய ஆணையத்தின் சுகாதாரத் துறையில் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாகும்.
இதய நோய்களுக்குப் பிறகு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில், மரணத்துக்கு இரண்டாவது முக்கிய காரணமாகப் புற்றுநோய் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், சுமார் 3 லட்சம் மக்கள் புற்று நோயால் பாதிக்கப்படுகிறார்கள், மேலும் சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் புற்று நோயால் மரணம் அடைகின்றனர்.
ஐரோப்பாவில் புற்றுநோய்க்கு மது அருந்துதல் ஒரு முக்கிய காரணமாகும் என்று உலக சுகாதார மையத்தின் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம், எச்சரித்துள்ளது. 2021-ல் தொடங்கப்பட்ட ஐரோப்பாவின் புற்றுநோயை வெல்லும் திட்டம், புற்றுநோயைக் கட்டுப் படுத்துவதிலும், அதற்காக உறுப்பு நாடுகளை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறது.
புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் ஐரோப்பா முன்னணியில் இருப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் இந்தத் திட்டத்தைத் தீவிரமாகச் செயல்படுத்தி வருவதே காரணமாகும். இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில், மதுபானங்களில் முக்கிய மூலப்பொருளாக அறியப்படும் எத்தனாலை, மரணத்தை ஏற்படுத்தும் நோய் காரணியாகக் கொண்டு ஐரோப்பிய ஒன்றியம் ஆய்வு செய்யத் தொடங்கியது.
கடந்த அக்டோபர் பத்தாம் தேதி, ஐரோப்பிய கெமிக்கல்ஸ் ஏஜென்சியின்ஆய்வுக் குழு, புற்றுநோய் மற்றும் கர்ப்ப பிரச்சனைகள் அதிகரிப்பதற்கு எத்தனால் என்ற நச்சுப் பொருளே காரணம் என்று கூறி, எத்தனால் பயன்பாட்டைத் தடை செய்யப் பரிந்துரைத்துள்ளது.
வரும் நவம்பர் மூன்றாவது வாரத்தில் கூடும் ஐரோப்பிய கெமிக்கல்ஸ் ஏஜென்சியின் உயிரியல் கொல்லி தயாரிப்புகள் குழு, “எத்தனால் புற்றுநோயை உண்டாக்கும் என்று இறுதி அறிக்கையைக் கொடுத்தால், ஐரோப்பிய ஆணையத்தால் இறுதி முடிவு எடுக்கப்பட்டு, எத்தனாலைத் தடை செய்யப் பரிந்துரை வழங்கப்படும் என்று ஐரோப்பிய ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சானிடைசர்களுக்கும் தடை விதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, COVID காலத்தில் கொரொனா தொற்றுநோய் பரவியபோது, ஆல்கஹால் அடிப்படையிலான சானிடைசர்கள் அத்தியாவசியப் பொருளாக உலகமெங்கும் மாறின.
கொரொனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் ஒரு உத்தியாக உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐரோப்பிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் (ECDC) உள்ளிட்ட சுகாதார அமைப்புக்களால் சானிடைசர்கள் பெரிதும் அங்கீகரிக்கப்பட்டன.
இதன் விளைவாகப் பொது மற்றும் தனியார் துறைகளில் ஆல்கஹால் அடிப்படையிலான சானிடைசர்களுக்கான தேவை குறிப்பிடத் தக்க அளவில் அதிகரிக்கத் தொடங்கியது. குறிப்பாக, ஐரோப்பிய சானிடைசர் சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் நாடாக ஜெர்மனி உள்ளது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஐரோப்பாவின் சானிடைசர் சந்தை 480 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் அதிகரிக்கும் என்று மதிப்பிடப் பட்டுள்ளது. ஒருவேளை சானிடைசர்களுக்குத் தடை என்றால், மாற்றாக எதைப் பயன்படுத்துவது என்பது குறித்த கேள்விகள் இப்போதே எழுந்து விட்டன.
















