தமிழகத்தில் இன்று செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக நீடிக்கிறது. தொடர்ந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று பிற்பகலில் தென் மேற்கு மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வட தமிழக, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அப்பால் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதையடுத்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. இந்நிலையில், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கும், புதுச்சேரிக்கும் இன்று அதி கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.