மணிப்பூரில் நிங்கோல் சகோபா திருவிழாவை முன்னிட்டு புத்தாடை உள்ளிட்ட பொருட்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நிங்கோல் சகோபா என்பது மணிப்பூரின் மெய்தே மக்களால் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாவாக விளங்குகிறது. இது சகோதர, சகோதரி உறவை வலுப்படுத்தும் ஒரு சமூக விழாவாகப் பார்க்கப்படுகிறது.
சகோதரர்கள், திருமணம் ஆன தங்களின் சகோதரிகளையும், அவர்களின் குடும்பத்தினரையும் தாய் வீட்டுக்கு அழைத்து, சிறப்பு விருந்தளிப்பார்கள். அப்போது, திருமணம் ஆன பெண்கள் தங்கள் சகோதரர்களுடன் அமர்ந்து விருந்து உண்டு, உறவுகளைப் புதுப்பித்துக் கொள்வார்கள்.
மணிப்பூர் அரசு இந்தப் பண்டிகையை விடுமுறை நாளாக அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான நிங்கோல் திருவிழா வரும் வியாழக்கிழமை கொண்டாடப்பட உள்ளது.
இதற்காகப் புத்தாடை மற்றும் விருந்தளிப்பதற்கு தேவையான பொருட்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் இம்பால் சந்தையில் கடும் நெரிசல் ஏற்பட்டது.