ஹெச்-1 பி விசாவிற்கு புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே அதற்கான கட்டணமாக 88 லட்சம் ரூபாய் வசூலிக்கப்படும் என அமெரிக்கா விளக்கமளித்துள்ளது.
இந்தியா போன்ற வெளிநாடுகளிலிருந்து திறமையான பணியாளர்களை தேர்வு செய்து அவர்களுக்குப் பயிற்சி அளித்துப் பணி வழங்க அமெரிக்க நிறுவனங்கள் ஹெச்-1 பி விசாவையே பயன்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், ஹெச்-1 பி விசா கட்டணம் 1 லட்சத்து 47 ஆயிரம் ரூபாயில், இருந்து 88 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதனால் ஹெச்-1 பி விசா வைத்திருந்த பணியாளர்கள் மட்டுமின்றி, அமெரிக்க நிறுவனங்களும் அதிர்ச்சி அடைந்தன.
தற்போது பணியாளர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் ஹெச்-1 பி விசாவுக்காக உயர்த்தப்பட்ட புதிய கட்டணத்தை ஏற்கனவே ஹெச்-1 பி விசா வைத்திருப்போர் செலுத்த தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல், மாணவர் விசாக்கள், தொழில்முறை விசாக்கள் உள்ளிட்ட விசாக்களை வைத்திருப்போருக்கும் இந்தக் கட்டண உயர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.