தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மழை வெள்ளத்தால் சேதமடைந்த பாவூரான் கால்வாய் மற்றும் குற்றாலம் மெயின் அருவி பகுதிகளைத் தமிழக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாகக் கூறினார்.
மழையால் 14 குடிசை வீடுகள், 6 ஓட்டு வீடுகள் சேதமடைந்துள்ளன என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும், விவசாய பயிர்கள் பாதிப்புகுறித்து கணக்கெடுப்பு நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
மின்தடைகள் ஏற்படாமல் பாதுகாப்பான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 40 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.