மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பாளியான அமித்ஷா அனைவராலும் போற்றப்படுகிறார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பு எந்திரத்தை வலுப்படுத்தவும், ஒவ்வொரு இந்தியரும் கண்ணியமான வாழ்க்கை வாழ்வதை உறுதி செய்யவும் பாராட்டுத் தக்க முயற்சிகளை அமித்ஷா மேற்கொண்டு வருகிறார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அமித்ஷா நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ்ந்து சேவையாற்றிட இறைவனை பிரார்த்திக்கிறேன் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தேசிய பாதுகாப்பு மற்றும் ஒற்றுமையை வலுப்படுத்துவதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அயராது அர்ப்பணிப்பு உண்மையிலேயே பாராட்டத்தக்கது எனத் தெரிவித்துள்ளார்.
நமது தேசத்திற்காகத் தொடர்ந்து சேவையாற்றி வரும் அமித்ஷாவுக்கு தொடர்ச்சியான வெற்றி கிடைக்க வாழ்த்துகிறேன் எனவும் இபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில், தனது திறமையான நிர்வாகத் திறன்மூலம் தேசத்தின் கட்டமைப்பை வலுப்படுத்தியவர் அமித்ஷா எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தேசத்தைச் சீரான வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்ல அமித்ஷா மேற்கொள்ளும் முயற்சிகள் எண்ணிலடங்காதவை என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும், ஒற்றுமையை வளர்ப்பதிலும் அமித்ஷா மேற்கொண்ட அயராத முயற்சிகள் முத்திரையைப் பதித்துள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார். நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியுடன் நமது தேச சேவையில் இன்னும் பல ஆண்டுகள் வாழ வாழ்த்துக்கள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக முன்னாள் தலைவரும், தெலங்கானா முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தராஜன் வெளியிட்டுள்ள பதிவில், ஒரு திறமையான, துடிப்பான, தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவரைக் கொண்டிருப்பதில் பெருமைப்படுகிறேன் எனத் தெரிவித்துள்ளார். அனைத்து துறைகளையும் பாதுகாப்பாக மாற்றியுள்ள அமித்ஷா, நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை பிாரர்த்திக்கிறேன் எனக் கூறியுள்ளார்.
பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், கட்சி தலைவராகவும், உள்துறை அமைச்சராகவும் இருந்து ஒவ்வொரு செயல்பாட்டிலும் தனது முக்கியத்துவத்தை பதிக்கக்கூடிய திறமைமிக்கவர் அமித்ஷா எனப் புகழாரம் சூட்டியுள்ளார். நல்ல ஆரோக்கியத்துடனும், வலிமையுடனும் அமித்ஷா சேவையாற்றிட இறைவனை பிாரர்த்திக்கிறேன் எனவும் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.