தஞ்சையில் தொடர் மழை காரணமாக 30 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கியதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 800 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
தொடர் மழை காரணமாகப் பல்வேறு பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட குறுவை நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
காட்டூர் பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 30 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கியுள்ளதாகக் கூறியுள்ளனர்.
மழை பெய்யும்போது நெல்மணிகளை காவல் காப்பதற்கும், உலர வைப்பதற்கும் நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் வரை கூடுதலாகச் செலவு செய்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும், நெல்மணிகளின் ஈரப்பதத்தை கணக்கில் கொள்ளாமல் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை விரைந்து சேமிப்பு கிடங்கிற்கு அனுப்ப வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.