கனடா மற்றும் சீன மருத்துவ விஞ்ஞானிகள், A இரத்த வகை சிறுநீரகத்தில் உள்ள ஆன்டிஜென்களை நீக்கி, அதை யாருக்கும் பொருந்தக்கூடிய “உலகளாவிய சிறுநீரகமாக” மாற்றி, புதிய மருத்துவ சாதனை படைத்துள்ளனர். இந்த அரிய கண்டுபிடிப்பு ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றும் என்று பாராட்டப் படுகிறது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு இரத்த வகை இணக்கத்தன்மை மிகவும் முக்கியமானதாகும். சிறுநீரகத் தானம் செய்பவர்களின் இரத்த வகை பெறுநரின் இரத்த வகைக்கு இணக்கமானதாக இருக்க வேண்டும் என்பது தான் இதன் அடிப்படையாகும். குறிப்பாக, O இரத்த வகை கொண்ட சிறுநீரக நோயாளிகள், O இரத்த வகையைச் சேர்ந்தவர்களிடமிருந்து மட்டுமே சிறுநீரகத்தைப் பெற முடியும் என்ற நிலை இருந்து வந்தது.
இரத்த வகை பொருத்தமின்மை காரணமாகப் பல O இரத்த வகை கொண்ட சிறுநீரக நோயாளிகள், மாற்று சிறுநீரகத்துக்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய சூழல் நீடித்து வந்தது. இந்த மருத்துவச் சிக்கலைத் தீர்க்கும் வகையில், கனடா மற்றும் சீன மருத்துவ விஞ்ஞானிகள் ஒரு புரட்சிகரமான பரிசோதனை முயற்சியில் வெற்றி பெற்றுள்ளனர்.
முதன்முதலாக, Universal Kidney எனப்படும் “உலகளாவிய சிறுநீரகத்தை உருவாக்கிச் சாதனை படைத்துள்ளனர். இந்த மருத்துவச் சாதனையின் மூலம், O இரத்த வகை கொண்ட கொண்ட சிறுநீரக நோயாளிகள், O இரத்த வகை மட்டும் அல்லாமல், அனைத்து இரத்த வகையினரிடமிருந்தும் மாற்று சிறுநீரகத்தைப் பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
A வகை இரத்த சிறுநீரகத்தில் காணப்படும் சர்க்கரை மூலக்கூறாகிய A வகை (antigen) ஆன்டிஜென்களை வெட்டி அகற்றி விட்டு, அந்தச் சிறுநீரகத்தை O ரத்த வகை சிறுநீரகமாக மருத்துவ விஞ்ஞானிகள் மாற்றியமைத்துள்ளனர்.
மூளை செயலிழந்த ஒரு நோயாளியின் உடலில் இந்த மாற்றியமைக்கப்பட்ட சிறுநீரகம் பொருத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டதாகவும், பலநாட்கள் இந்தப் புதிய சிறுநீரகம் சிறப்பாகச் செயல்பட்டதாகவும் கண்டறியப் பட்டுள்ளது. இன்னும் மனிதர்களில் இந்தப் புதிய கண்டுபிடிப்பு முழுமையான பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும் என்றாலும், இது உலகளாவிய சிறுநீரகத்தை உருவாக்கும் சாத்தியத்தைக் காட்டுகிறது.
இந்தப் புதிய முறையால், விரைவாக மாற்றப்பட்ட சிறுநீரகங்களை நோயாளிகளுக்கு வழங்க முடியும் என்பதால் சீறுநீரக நோயால் ஏற்படும் உயிரிழப்புகள் குறையும் என்று கூறப் படுகிறது. உலக அளவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க முன்னேற்றமாகப் போற்றப்படுகிறது.
முத்தாய்ப்பாக, தானம் செய்யப்படும் ஒவ்வொரு உறுப்பையும் உலகளாவியதாக மாற்றும் திறன் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவத்தை எல்லாருக்கும் பயனுள்ளதாக மாற்றும் என்று கூறப்படுகிறது.