தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்த கேரள அரசு, மத்திய நிதியை உறுதி செய்வதற்காக PM SHRI திட்டத்தில் இணைய முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில், தமிழக அரசு தொடர்ந்துஇந்தத் திட்டத்தில் சேராமல் அடம்பிடித்துவருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்தத ஒரு செய்திதொகுப்பைத் தற்போது காணலாம்.
நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 14 ஆயிரத்து 500 பள்ளிகளை முன்னுதாரண பள்ளிகளாக மேம்படுத்துவதே PM SHRI திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டபள்ளிகளுக்குத் தனிக்கட்டடம், சாய்வுதளம், போதுமான மாணவர் சேர்க்கை, தனித்தனி கழிப்பறைகள், குடிநீர், கைக்கழுவும் வசதி, தடையற்ற மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட 10 அடிப்படை நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
தற்போது இந்தியாவின் 670 மாவட்டங்களில் 13 ஆயிரத்து 070 PM SHRI பள்ளிகள் இயங்கி வரும் நிலையில், அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் ஆயிரத்து 888 PM SHRI பள்ளிகள் உள்ளன. இதற்கிடையே, தேசிய கல்வி கொள்கை 2020-ஐ கடுமையாக விமர்சித்து வந்த கேரள அரசு, 5ஆண்டுகளுக்குப் பிறகு அதனை நடைமுறைப்படுத்தும் மத்திய அரசின் திட்டமான PM SHRI திட்டத்தில் இணைய ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடிவு செய்துள்ளது.
குறிப்பாக மத்திய அரசு PM SHRI திட்டத்துடன் சமக்ர சிக்ஷா அபியான் நிதியை இணைத்துவிட்டதால், 2023-2024 நிதியாண்டின் நடுப்பகுதியில் இருந்து கேரளாவுக்கான ஆயிரத்து 143 கோடி ரூபாய் மத்திய நிதி தடைசெய்யப்பட்டு, ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கேரள அரசு PM SHRI திட்டத்தில் இணைய முடிவெடுத்துள்ள நிலையில், இது தொடர்பாக எழுந்த சர்ச்சைகளுக்கு கேரள கல்வித்துறை அமைச்சர் வி.சிவன்குட்டி விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், மாணவர்களின் நலன் கருதி மாநிலத்திற்குரிய சமக்ர சிக்ஷா அபியான் நிதியை பெறுவதற்காக இந்த நடைமுறையை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், மாணவர்களுக்கு கிடைக்கும் நன்மைகளை தடுக்கக் கூடாது என தெரிவித்த அவர், வேளாண்மை, சுகாதாரம், உயர் கல்வி ஆகிய துறைகளின் வரிசையில், பள்ளி கல்வித் துறையும் இனி மத்திய திட்டங்களின் பலன்களை அனுபவிக்கப்போவதாக தெரிவித்தார்.
அதே நேரத்தில் கேரள அரசு தனது கல்வி கொள்கையிலிருந்து எப்போது விலகாது எனவும், மாநிலத்தின் கொள்கைக்கு முரணான தேசிய கல்வி கொள்கை அம்சங்கள் எதுவும் கேரளாவில் நடைமுறைக்கு வராது என்றும் அமைச்சர் வி.சிவன்குட்டி உறுதியளித்தார். முன்னதாக தேசிய கல்வி கொள்கை திட்டம் தனியார்மயத்தை ஊக்குவித்து பொது கல்வியை பாதிக்கும் அபாயம் உள்ளதாகவும், 6 முதல் 14 வயதுடைய மாணவர்களுக்கான கட்டாய இலவச கல்வியில் இருந்து, அரசின் பொறுப்பை தேசிய கல்வி கொள்கை விலக்குவதாகவும் அக்கட்சி குற்றச்சாட்டு முன்வைத்திருந்தது.
ஆனால், PM SHRI திட்டத்தில் தற்போது கேரளாவும் இணைந்துவிட்ட நிலையில், தமிழ்நாடு மட்டுமே இத்திட்டத்தில் இணைய தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. ஏற்கனவே ஆசிரியர் பயிற்சி, மதிப்பீடு, பள்ளி வசதிகள் உள்ளிட்ட பல துறைகளில் PM SHRI திட்டத்தின் இலக்குகளை கேரளா எட்டியுள்ளதால், ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம் அம்மாநில அரசு தங்கள் கல்வி கொள்கையை கைவிடும் நிலை ஏற்படாது என கல்வித்துறை சார்ந்த நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும், தேசிய கல்வி கொள்கையின் 4.31-வது பிரிவின்படி தேசிய பாடத்திட்டத்துடன் உள்ளூர் பாடத்திட்டங்களையும் சேர்க்கலாம் என்பதால், மாநிலங்களுக்கு தங்கள் பாடத்திட்டத்தை தாங்களே தீர்மானிக்கும் சுதந்திரம் உண்டு என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மத்திய நிதியை உறுதிபடுத்தவும், தங்கள் மாநில கல்வி கொள்கை நிலைத்திருக்கவும் கேரள அரசு சமநிலையான முடிவை மேற்கொண்டுள்ள நிலையில், இனி தனித்து விடப்பட்ட தமிழ்நாடு அரசு இதில் என்ன முடிவெடுக்க காத்திருக்கிறது என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.