புதுக்கோட்டை உழவர் சந்தையை மழைநீர் சூழ்ந்ததால் விவசாயிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
புதுக்கோட்டையில் உள்ள உழவர் சந்தைக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விளைவிக்கப்படும் காய்கறிகளை எடுத்து வந்து விவசாயிகள் வியாபாரம் செய்து வரும் நிலையில், புதுக்கோட்டையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக உழவர் சந்தையை மழை நீர் சூழ்ந்தது.
சந்தையில், அரை அடி உயரத்திற்கு மழை நீர் தேங்கியதால் காய்கறிகளைக் கடைகளில் வைத்து வியாபாரம் செய்ய முடியாமல் விவசாயிகள் அவதிக்குள்ளாகினர்.
இதே போன்று, உழவர் சந்தையில் காய்கறிகளை வாங்க வந்த பொதுமக்களும் சிரமத்திற்கு ஆளாகினர்.
உழவர் சந்தையில் உள்ள வடிகாலில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் மழைநீர் சூழ்ந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், கால்வாய் அடைப்பை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















