ஹலால் சான்றிதழ்கள் மூலம் திரட்டப்படும் நிதி பயங்கரவாதம் மற்றும் மதமாற்றங்களுக்குத் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குற்றஞ்சாட்டியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் நடைபெற்ற RSS-ன் நூற்றாண்டு விழாவில் பேசிய அவர், எந்தவொரு பொருளையும் வாங்கும்போது, அதில் ஹலால் சான்றிதழ் லேபிள் உள்ளதா என்று சரிபார்க்க வேண்டும் எனவும், உத்தர பிரதேசத்தில் ஹலால் சான்றிதழ் தடை செய்துள்ளதால், அங்கு யாரும் அந்தப் பொருட்களை வாங்கவோ, விற்கவோ துணிய மாட்டார்கள் எனத் தெரிவித்தார்.
மத்திய அல்லது மாநில அரசுகளிடமிருந்து அதிகாரப்பூர்வ அங்கீகாரம் இல்லாத போதிலும், இது போன்ற லேபிள்களை வெளியிடும் நிறுவனங்கள் நாடு முழுவதும் சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளதாகக் கூறினார்.
இந்தப் பணம் அனைத்தும் பயங்கரவாதம், லவ் ஜிஹாத் மற்றும் மத மாற்றங்களுக்காகத் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகக் குற்றஞ்சாட்டிய அவர், ஹலால் சான்றிதழ் என்ற பெயரில் இந்திய நுகர்வோரைச் சுரண்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.