தீபாவளி பண்டிகையையொட்டி நாடு முழுவதும் 5 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்திருப்பதாக அகில இந்திய வர்த்தகர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
நவராத்திரி முதல் நாளில் இருந்து ஜிஎஸ்டி விகிதங்கள் குறைக்கப்பட்டு, புதிய சீர்திருத்தங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதனால், பெரும்பாலான பொருட்களின் விலை குறைந்ததால், தீபாவளி பண்டிகைக்கு நாடு முழுவதும் விற்பனை களைகட்டியது.
இது குறித்து வர்த்தகர்கள் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முந்தைய ஆண்டுகளை விட, நடப்பாண்டு தீபாவளிக்கு பல்வேறு பொருட்களின் விற்பனை அமோகமாக நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு தீபாவளி பண்டிகையின்போது 4 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததாகவும், நடப்பாண்டு அந்த சாதனை முறியடிக்கப்பட்டு 5 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது.
போக்குவரத்து உள்ளிட்ட சேவை துறைகள் வாயிலாக 65 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கைவினை பொருட்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருவதால் சிறுதொழில் முனைவோர் பலன் பெற்று வருவதாக அகில இந்திய வர்த்தகர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.