திராவிட மாடல் ஆட்சியின் சாதனைக்கு, தீபாவளிக்கு டாஸ்மாக்கில் நடந்த மதுபான விற்பனையே சாட்சி என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூர் பகுதியில் உள்ள பால்வண்ண நாதர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் வணிக வளாகம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கும், அறநிலையத்துறைக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, கடந்த ஆண்டு வரை தமிழக அரசின் கடன் 8 லட்சத்து 36 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது என்றும், இது 2025-26 ஆண்டில் இன்னும் அதிகரிக்கும் எனவும் தெரிவித்தார்.
மேலும், மத்திய அரசு ஒதுக்கீடு செய்த நிதியை தவறாக பயன்படுத்தியதால் தற்போது சென்னை தண்ணீரில் தத்தளிக்கிறது என்றும், தமிழக நிதியமைச்சர் பொய் பேசி வருவதாகவும் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.