தாம்பரம் – செங்கல்பட்டு இடையே 757 கோடி ரூபாய் மதிப்பிலான நான்கு வழிப்பாதை திட்டத்திற்கு, மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒப்புதல் அளித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் இருந்து செல்லும் பெரும்பாலான தென் மாவட்ட ரயில்கள் செங்கல்பட்டு வழியே செல்கின்றன.
தினமும் 60க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களும், 300க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களும் இயக்கப்படுகின்றன.
ஆனால் இந்த வழித்தடத்தில் மூன்று ரயில் பாதைகள் மட்டுமே உள்ளதால் நான்காவது பாதை அமைப்பதற்கான திட்ட அறிக்கையைத் தயாரித்து, ரயில்வே அமைச்சகத்திடம் தெற்கு ரயில்வே வழங்கியது.
இந்தத் திட்டத்திற்கு மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதுதொடர்பாகத் தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில், தாம்பரம் – செங்கல்பட்டு இடையே, 30 கிலோ மீட்டர் துாரம் 757 புள்ளி 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நான்காவது ரயில் பாதை அமைக்கத் திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த வழித்தடத்தில், 160 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்கள் செல்ல வகை செய்யப்பட்டுள்ளதாகவும், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணியருக்கு பெரிதும் பயனளிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆண்டுக்கு 157 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் வகையில், பொத்தேரியில் சரக்கு ரயில் போக்குவரத்தும் கையாளப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.