டெஸ்லா காரில் உள்ள சென்சார்கள் பேய்கள் நடமாடுவதை கண்டுபிடித்திருப்பதாக வெளியான வீடியோக்கள் இணையத்தை வைரலாக்கியுள்ளன. இது பேய்களை பற்றிய விவாதங்களையும் கிளப்பியுள்ளன.
டெஸ்லா உரிமையாளர் ஒருவர் பகிர்ந்த இந்தக் காட்சிகள், இணையத்தை சூடேற்றியுள்ளன.. சென்சார்கள், ரேடார்களை உள்ளடக்கிய ஓட்டுநர் இல்லாத டெஸ்லா தானியங்கி கார் ஒன்றை கல்லறை அருகே ஓட்டிச் சென்றிருக்கிறார் பயனர் ஒருவர்.
அப்போது காரிலிருந்து சென்சாரில் தெரிந்த காட்சிகள் அவரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.. காருக்கு அருகே யாரும் இல்லாதபோதும், அவரது காரை சுற்றி மர்மமான உருவங்கள் நடமாடுவது போல் பதிவான காட்சிகளை இணையத்தில் பகிர்ந்திருக்கிறார் அவர்.
இந்தக் காட்சி ஒரு பக்கம் அதிர்ச்சியாக இருந்தாலும், மறுபக்கம் சந்தேகத்தையும் தூண்டியிருகின்றன. வீடியோவில் இருப்பது உண்மையா என்பதை சோதிக்க, வேறுசில பயனர்களும் முயற்சித்துப் பார்த்துள்ளனர்.
ஆனால், அவர்களது டெஸ்லா காரின் திரையும், குறிப்பிட்ட பகுதிகளில் மனிதர்கள் போன்ற உருவங்கள், அங்கும், இங்கும் உலா வருவதை காட்டியதாகக் காட்சிகளைப் பகிர்ந்துள்ளனர். இது தங்களுக்கு தொந்தரவாக இருந்ததாகவும் வீடியோவைப் பகிர்ந்தவர்கள் பதிவிட்டுள்ளனர்.
மற்றொரு டெஸ்லா உரிமையாளர் அடர்ந்த காட்டுப் பகுதி வழியாக வாகனம் ஓட்டும்போது, இதே போன்ற அனுபவத்தைப் பெற்றதாகப் பதிவிட்டிருக்கிறார். டெஸ்லாவின் சென்சார்கள் காரைச் சுற்றியுள்ள மனிதனைப் போன்ற உருவங்களைக் காட்டியதாகவும், இருப்பினும் வெளியே எந்த அசைவும் தெரியவில்லை என்றும் அவர் விவரித்தார்.
இது போன்ற நிகழ்வுகள், பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.. சில பயனர்கள் டெஸ்லாவின் தன்னியக்க பைலட் அமைப்பு ‘ஆவிகள் அல்லது எதிர்மறை ஆற்றல்களைக் கண்டறிய முடியும் என்பதை காட்டுவதாக நகைச்சுவையுடன் பதிவிட்டுள்ளனர்.
மற்றவர்கள் காரின் சென்சாரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறாக இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த வீடியோக்கள் மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றாலும், டெஸ்லா கார்கள் அமானுஷ்ய சக்திகளைக் கண்டறிகின்றன என்பதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இல்லையாம். அதேநேரத்தில், டெஸ்லா தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.