விமான நிலையம், கரன்சி, குற்றங்கள் என எதுவும் இல்லாத விநோத நாடு, மற்ற நாடுகளை விடச் செல்வந்த நாடாக உள்ளது என்றால் நம்ப முடிகிறதா… அப்படியொரு நாடு ஐரோப்பாவில் சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியாவுக்கு இடையே உள்ளது.. அதைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்களைப் பார்க்கலாம்.
ஐரோப்பா கண்டத்தில் சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியாவுக்கு இடையே தனித்து நிற்கும் நாடுதான் (Liechtenstein) “லீக்கின்ஸ்டைன்”. லீக்கின்ஸ்டைன், இளவரசரின் தலைமையில் ஆளப்படும் முடியாட்சி நாடாக உள்ளது. மேற்கு மற்றும் தெற்கில் சுவிட்சர்லாந்து எல்லைகளாலும், கிழக்கு மற்றும் வடக்கில் ஆஸ்திரிய நாட்டின் எல்லைகளாலும் சூழப்பட்டுள்ளது.
இந்நாட்டின் மொத்த பரப்பளவே 160 சதுர கிலோ மீட்டர்கள்தான். 30 ஆயிரம் பேர் வசிக்கும் இந்நாட்டில், சர்வதேச விமான நிலையங்கள் இல்லை, சொந்தமாகக் கரன்சியை அச்சடிப்பதில்லை, ஆனாலும் மற்ற நாடுகளை விடப் பணக்கார நாடாக இருக்கிறது என்றால் அதனைக் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை.
மிகப்பெரிய படைகள், பரந்த நிலப்பரப்பு, சுதந்திரமான பொருளாதாரத்தை பற்றி மற்ற நாடுகள் சிந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில், நம்ப முடியாத செல்வமும், பாதுகாப்பின் ரகசியமும், அதற்கு நேர்மாறாக இருக்கிறது.
பெரும்பாலான நாடுகள் தங்களது இறையாண்மை, சின்னங்கள், தனித்துவமான மொழியைக் கடுமையாகப் பாதுகாக்கும் நிலையில், லீக்கின்ஸ்டைன் பாதை சற்று வித்தியாசமானது… அந்நாடு அண்டை நாடுகளின் வளங்களைப் பயன்படுத்திக் கொண்டதுதான் அதற்குக் காரணம்.
சுவிஸ் பிராங்கை ஏற்றுக்கொண்டதன் மூலம், லீக்கின்ஸ்டைன், தனக்கொன்று சொந்தமாக மத்திய வங்கியை நிர்வகிக்கும் சுமையிலிருந்து விலகியதோடு, உறுதியான நாணயத்தை பெற்றது.. விமான நிலைய கட்டுமானத்தைக் கைவிட்டதன் மூலம், பில்லியன் கணக்கில் உட்கட்டமைப்பு செலவுகளைச் சேமித்து, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா நாடுகளின் போக்குவரத்தைப் பயன்படுத்திக் கொண்டது.
அதிகாரப்பூர்வ மொழியாக ஜெர்மனை ஏற்றுக்கொண்ட லீக்கின்ஸ்டைன், பொருளாதார சக்தி மையத்துடன் தடையின்றி தன்னை ஒருங்கிணைத்துக் கொண்டது. நிலப்பரப்பில் சிறிய அளவில் இருந்தாலும், லீக்கின்ஸ்டைன் ஒரு தொழில்திறன் மிகுந்த நாடாக உள்ளது.
கார் பாகங்கள் முதல் விண்வெளி தொழில்நுட்பம் வரை அனைத்தையும் உற்பத்தி செய்யும் நாடாக லீக்கின்ஸ்டைன் உள்ளது. நாட்டில் வாழும் மக்களை விட அதிகமான வேலைவாய்ப்புகள் இங்குக் காணப்படுகின்றன.
குறிப்பாகக் குடிமக்களை விட நாட்டில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்கள் இங்கு அதிகம் உள்ளன. இது ஏராளமான வாய்ப்புகளுக்கும் உலகின் மிக உயர்ந்த தனிநபர் வருமானங்களில் ஒன்றுக்கும் வழிவகுக்கிறது. லீக்கின்ஸ்டைன் நாட்டில் வரி மிகவும் குறைவாக இருப்பதால் பொதுமக்கள் கடன் சுமையால் பாதிக்கப்படும் சூழல் ஏற்படவில்லை.
இது பலவீனத்தின் அடையாளம் அல்ல… நாட்டிலுள்ள வளங்களை வீணாக்குவதற்குப் பதில், லீக்கின்ஸ்டைன் தனது முழு சக்தியையும், முக்கியமானவற்றில் செலுத்த முடியும்.. செழிப்பான பொருளாதாரத்தையும், நாட்டு மக்களுக்கான வாழ்க்கைத் தரத்தையும் கட்டியெழுப்ப முடியும் என்பதை லீக்கின்ஸ்டைன் உணர்ந்துள்ளதே அதன் அகண்ட பார்வைக்கு காரணம்.