கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் சுமார் ஒரு வாரத்திற்கும் மேலாக லாரியில் வைக்கப்பட்ட நெற்பயிர்கள் முளைத்துச் சேதமடைந்த சம்பவம் விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் சம்பா நெற்பயிர்கள், கொள்முதல் செய்யப்பட்ட பின்னர் சேமிப்பு கிடங்கிற்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.
இந்த நிலையில், ஆதிநாராயண நல்லூர் பகுதியில் இருந்து விருத்தாசலம் சேமிப்பு கிடங்குக்குக் கொண்டு வரப்பட்ட நெல் மூட்டைகள், அதிகாரிகளின் அலட்சியத்தால் லாரிகளிலேயே வைக்கப்பட்டன.
ஒரு வாரத்திற்கும் மேலாக நெல்மணிகள் லாரியில் இருந்து இறக்கப்படாததால் அவை முளைவிட்டு முற்றிலும் சேதமடைந்தன. பாடுபட்டு விளைவித்த நெற்பயிர்கள் சேதமடைந்தது விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.